ரிபாகினா புதிய சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சபலென்காவை வீழ்த்தினார்.

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் சபலென்கா 27, உலகின் 'நம்பர்-5' வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 26, மோதினர். முதல் செட்டை ரிபாகினா 6-4 எனக் கைப்பற்றினார். சபலென்கா, 2வது செட்டை 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டின் முதல் 3 'கேமை' சபலென்கா (3-0) கைப்பற்றினார். அடுத்த 4 'கேமில்' ஆதிக்கம் செலுத்திய ரிபாகினா, 4-3 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து அசத்திய ரிபாகினா, 3வது செட்டை 6-4 என வென்றார்.

முதல் கோப்பை: இரண்டு மணி நேரம், 18 நிமிடம் நீடித்த பைனலில் ரிபாகினா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே 2022ல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். 2023ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் சபலென்காவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் ரிபாகினா. ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனையானார் ரிபாகினா.
தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பைனலில் ஏமாற்றிய சபலென்கா, இத்தொடரில் 3வது கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.


ரூ. 38 கோடி பரிசு

கோப்பை வென்ற ரிபாகினாவுக்கு, ரூ. 38.04 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சபலென்கா, ரூ. 19.71 கோடி பரிசுத்தொகை பெற்றார்.


சாதிப்பாரா ஜோகோவிச்


ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் (பிப். 1), உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, உலகின் 'நம்பர்-4' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 38, மோதுகின்றனர். அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்திய ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் 11வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். பைனலில் வெற்றி பெற்றால், 25 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் டென்னிஸ் நட்சத்திரம் என்ற சாதனை படைக்கலாம். ஏற்கனவே ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட் கோர்ட், 24 பட்டம் வென்றுள்ளார்.
அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்வெரேவை வீழ்த்திய அல்காரஸ், இத்தொடரின் பைனலுக்கு முதன்முறையாக முன்னேறினார். பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினால், ஆஸ்திரேலிய ஓபனில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றலாம். தவிர இவர், 'கேரியர் கிராண்ட்ஸ்லாம்' வென்ற இளம் வீரராகலாம்.

Advertisement