'உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம்'
நுால்களை வாசித்தவர்கள், தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய 'எண்ணங்கள்' என்ற நுால் குறித்து, தனியார் நிறுவனத்தின் வணிக மேலாளர் கோபி தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். என்ன செய்வது என்று தெரியாமல் சோம்பி போய் உட்கார்ந்து இருக்கும் ஒருவர் உதயமூர்த்தியின் நுால் ஒன்றை படித்தால் போதும்.வாசித்து முடித்து முடித்த மறுகணமே தன்னம்பிக்கையும், உற்சாகமும் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். இந்த உலகத்தை எதிர்கொள்ளும் தைரியம் வந்து விடும்.
இவரது நுால்களில் 'எண்ணங்கள்' என்ற இந்த நுால், மிக முக்கியமான நுாலாகும். இந்த சிறிய நுால் பல இளைஞர்களின் வாழ்க்கைக்கு திசை காட்டியாக இருந்துள்ளது. இதுவரை, 141 பதிப்புகள் வெளி வந்துள்ளன. என் நண்பர்கள் பலருக்கு இந்த நுாலைதான் அதிகம் பரிசளித்து இருக்கிறேன்.
'எண்ணம்' (thought) என்பது வெளியிலிருந்து வருவதல்ல. அது மனத்தின் உள்ளார்ந்த அசைவு, ஒரு சிறிய அதிர்வு, ஒரு துடிப்பு போல உருவாகிறது.
எண்ணம் ஒரு விதை போன்றது. அதற்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நமக்கு அளிக்கும் ஆற்றல் இருக்கிறது. எண்ணங்களுக்கு மனிதன் வாழ்க்கையை மாற்றும் சக்தி உண்டு என்பதை அடிப்படை கருத்தாக கொண்டு எழுதப்பட்ட நுால். நாம் நினைப்பவை எல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்க வேண்டும். அந்த உயர்ந்த எண்ணம் நிறைவேறாவிட்டாலும், அப்படி நினைப்பதே நமக்கு ஒரு நேர்மறை வலிமையைத் தரும்.
உண்மையைப் பேசும், ஒழுக்கத் துாய்மை உடைய மனிதனின் எண்ணங்கள் எப்போதும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் என்ற, வள்ளுவரின் கருத்தை இந்த நுால் பிரதிபலிக்கிறது.
எண்ணங்கள் ஒளி வேகத்தை விட அதிகமாக பயணிக்கும் ஆற்றல் மிக்கது. ஒரு நாளில் மனதில் பல ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைக்கின்றன. மனிதர்கள் இந்த பிரபஞ்ச இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றனர். இதை எல்லோரும் உணர்வதில்லை.
நல்ல விஷயங்களை நினைத்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால் நாம் எண்ணிய இலக்கை அடையமுடியும். அதை இந்த சிறிய நுால் வழியாக உணர்த்துகிறார் நுாலாசிரியர்.
ஒரு மனிதனின் எண்ணமும் ஒரு விதைதான். எப்படி என்றால், ஒரு சிறிய எண்ணம் மீண்டும் மீண்டும் நினைக்கப்படும் போதுஅது நம்பிக்கையாக மாறுகிறது. நம்பிக்கை செயலில் வெளிப்படுகிறது. செயல்கள் பழக்கங்களாக மாறுகின்றன. பழக்கங்கள் குணநலனாக (character) மாறுகின்றன.
குணநலன் வாழ்க்கையை உருவாக்குகிறது. துாய எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு செல்லும். தெய்வீக எண்ணங்கள் தீய எண்ணங்களை நீக்கி, மனம் முழுவதும் ஒளி பரவச்செய்யும்.
எம்.எஸ்.உதயமூர்த்தியின் இந்நுால் நம்மை ஆற்றல் மிக்க மனிதனாகவும், எதையும் சாதிக்கும் சக்தியுள்ள சாதனையாளனாகவும் மாற்றுகிறது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நுால்.
மேலும்
-
இந்த முறை பிராந்திய போராக இருக்கும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!