சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி

18


லக்னோ: சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத 68 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் உத்தரபிரதேச அரசு, ஜனவரி 31ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விபரங்களை மானவ் சம்பதா என்ற இணையதளப் பக்கத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், உரிய காலக்கெடுவுக்குள் சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளத்தை உத்தரபிரதேச அரசு நிறுத்தி வைத்துள்ளது. சொத்து விபரங்களை பதிவேற்றும் வரையில் சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. தலைமைச் செயலாளர் முறையான அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், பல ஊழியர்கள் அதனைப் பின்பற்றவில்லை. இதனால் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளமும் அவர்களுக்கு கிடைப்பது சந்தேகம் தான்," என்றனர்.

Advertisement