பொன் மாணிக்கவேல் வழக்கு: முடித்துக்கொள்ள கோர்ட் பரிந்துரை

3

புதுடில்லி: தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம், 2018ல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த பொன். மாணிக்கவேல், அது தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை, துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுக்காமல் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து கால தாமதம் செய்ததால் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், 'சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் ஒரு வாரத்தில் துறை சார்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் ஒப்படைத்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, 2019 டிசம்பரில் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் தற்போது என்ன நிலவரம் என்பது குறித்த அறிக்கையை இரு தரப்பும் தாக்கல் செய்யுங்கள்; அதை அடிப்படையாகக் கொண்டு அடுத்த உத்தரவை பிறப்பிக்கிறோம்' எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு அமர்வு ஒத்தி வைத்தது.

மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிக்க பெரிதாக எதுவும் இல்லை என்பதால், அடுத்த விசாரணையோடு வழக்கை முடித்து விடலாம் எனவும் அமர்வு கூறியுள்ளது.

Advertisement