ஜோகோவிச் 'நம்பர்-3': டென்னிஸ் தரவரிசையில் முன்னேற்றம்
மெல்போர்ன்: டென்னிஸ் தரவரிசையில் செர்பியாவின் ஜோகோவிச் 3வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்தை கைப்பற்றினார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், 9வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார்.
ரிபாகினா 'நம்பர்-3': பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெலாரசின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதியில் ஏமாற்றிய அமெரிக்காவின் கோகோ காப், 3வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 4வது இடத்தில் தொடர்கிறார். சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா முறையே 9, 10வது இடத்துக்கு முன்னேறினர்.