பாகிஸ்தானில் இருந்து வந்த 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் தடை

4


புதுடில்லி: டில்லியின் மஜ்னு கா திலா என்ற பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த, 250 தலித் ஹிந்து குடும்பங்களை வெளியேற்ற தடை விதித்த உச்ச நீதிமன்றம், 'வெறும் குடியுரிமை வழங்குவது மட்டும் போதுமானது அல்ல. கண்ணியமான வாழ்விடத்தை உறுதி செய்வதும் அரசின் கடமை' என, குறிப்பிட்டது.


தலைநகர் டில்லியின் சிக்னேச்சர் பாலம் அருகே உள்ள மஜ்னு கா திலா என்ற பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்தப் பகுதியில், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த, 250 தலித் ஹிந்து குடும்பங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.


அவர்களுக்கு நம் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த இந்த மக்களுக்கு, நம் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது கவலை அளிக்கிறது.


குடியுரிமை என்பது வெறும் காகிதத்தோடு முடிந்து விடக்கூடாது. அந்த மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு தேவையான மறுவாழ்வு மற்றும் முறையான வீட்டுவசதி திட்டங்கள் அதனுடன் இணைந்திருக்க வேண்டும்.


மஜ்னு கா திலா பகுதியில் எவ்வித வெளியேற்ற நடவடிக்கையோ அல்லது கட்டுமான திட்டங்களையோ மேற்கொள்ளக் கூடாது. இந்த விவகாரம் குறித்து, விரிவான பதிலை நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement