தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு; அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்

6


நமது சிறப்பு நிருபர்




இந்தியப்பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி, 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு, திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நேற்றிரவு பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் பேசியதன் மூலம் இறுதி செய்யப்பட்டது.இதன் மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வரி குறைப்பு மட்டுமல்ல, அந்த அபராத வரியையும் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான வரியை குறைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
இதனால் ஆடை சார்ந்த தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும். அமெரிக்கா, இந்தியாவுக்கு 18 %, சீனாவுக்கு 35 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம், வங்க தேசத்துக்கு 20 சதவீதம், இந்தோனேசியாவுக்கு 19 சதவீதம், வியட்நாமுக்கு 20 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த போட்டி நாடுகளுக்கு இடையே இந்தியாவுக்கு மட்டும் 18 சதவீதம் குறைந்த வரியாக இருப்பதால், நிச்சயமாக இந்த தொழில் பன்மடங்கு வளர்ச்சியை பெறும்.
இவ்வாறு கே.எம். சுப்பிரமணியன் கூறினார்.

தை பிறந்தது; வழியும் பிறந்தது



அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர் கூறுவர். அதுபோல, ஆயுத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலுக்கு வழி பிறந்திருக்கிறது. இந்த வரி குறைப்பை பயன்படுத்திக்கொள்ள உற்பத்தியாளர்கள், தங்களது உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.



ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி குறைப்பு, அமெரிக்க வரி குறைப்பு ஆகியவற்றால் நமக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் திருப்பூர் தொழில் துறை அபரிமிதமான வளர்ச்சி பெறும். மனித வள திறனையும், உற்பத்தி திறனையும் அதிகரித்து, இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

குறைவான வரி



திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது: நிச்சயமாக இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மட்டுமல்ல, பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்புக்கு இடையே இருக்கும் நட்பின் வலிமையை காட்டுகிறது. போட்டி நாடுகளை விட குறைவான வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வந்துருப்பதாக தான் கருத வேண்டும். ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்ட 25 சதவீதம் கூடுதல் வரி என்பது வர்த்தகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.



தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை இருநாடுகளும் மேற்கொண்டு இருந்தாலும் கூட, தொழில்துறையும் மாற்று சந்தைகளை கொண்டு போய் கொண்டு இருந்தாலும் கூட, அமெரிக்கா அளவுக்கு வர்த்தகத்தை ஈடுகட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மையை அனைவரும் புரிந்தே இருந்தார்கள். அதுபோல அமெரிக்காவில் இருந்த இறக்குமதியாளர்களும் இந்தியாவிடம் பொருட்களை வாங்குவதற்கான விருப்பங்களை பெருமளவு கொண்டு இருந்தார்கள்.



இன்னும் ஓரிரு மாதங்கள் இதை தாமதித்து இருந்தால் இறக்குமதியாளர்கள் வேறு நாடுகளை நோக்கி முழு அளவில் சென்று இருப்பார்கள். பின்பு அவர்களை இந்தியாவிற்கான வர்த்தகத்தை முன்னெடுக்க கொண்டு வருபவது என்பது ஒரு சிரமமான காரியமாக போய் இருக்கும். தாமதமாக இருந்தாலும் ஒரு நல்ல தருணத்தில் ஒப்பந்தம் வந்திருக்கிறது என்று தொழில்துறையினர் நாங்கள் கருதுகிறோம்.

ஜவுளித்துறை




அதேபோல் இங்கு இருக்கும் உற்பத்தியாளர்களும் தங்களது உற்பத்தியின் கொள்ளவை உயர்த்தி வருகிறார்கள். உலக அளவில் 65 சதவீதம் நுகர்வில் உள்ள செயற்கை நூல் ஆடை உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். அந்த முயற்சியையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். அந்த ஒரு சந்தையையும் கைப்பற்றுவதன் மூலமாக மிக விரைவில் அடுத்த 5 வருடங்களில் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு என்பது ஜவுளித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த செயலாக அமையும். இவ்வாறு குமார் துரைசாமி கூறினார்.


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து ரத்தினம் கூறியதாவது: திருப்பூரில் இருந்து வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்கிறோம். இதில் 45 சதவீதம் அமெரிக்கா ஆர்டர். ஐரோப்பிய யூனியனுடன் தற்போது தான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும்.


தற்போது வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், வரும் காலத்தில் சுமுகமாக சூழலை ஏற்படுத்தி தருவதாக சொல்லி இருக்கிறார். இன்னும் வரும் காலத்தில் வரி பழைய நிலைக்கும் வரும். அமெரிக்க ஆர்டர்கள் அதிகமாக செய்ய முடியும். இதனால் ஜவுளித்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். வரி குறைப்பு வரவேற்க கூடிய விஷயமாகும். பழைய நிலைக்கு வரியை கொண்டு வந்தால் பின்னலாடை தொழில் சிறப்பாக செயல்படும். இவ்வாறு முத்து ரத்தினம் கூறினார்.



ஐடிஎப் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு, கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: அமெரிக்க இறக்குமதி சுங்க வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை அமெரிக்க சந்தையில் மீண்டும் சமநிலையான போட்டி நிலைக்கு வந்துள்ளது. முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவு பெறும் நிலையில் இருப்பதும், இந்தியாவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் ஆர்வம் அதிகரிப்பதும், ஏற்றுமதி முன்னேற்றம் தொடர்ந்து மேம்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

வளர்ச்சி



2026-27ம் நிதியாண்டு முதல், ஆடை மற்றும் வீட்டு ஜவுளி ஏற்றுமதிகளில் மாதந்தோறும் இரட்டை இலக்க வளர்ச்சி காணப்படும். இதன் மூலம், தற்போதைய 1.27 பில்லியன் டாலர் மாதாந்திர ஏற்றுமதி அளவு, 1.5 பில்லியன் டாலர் என்ற நிலையான அளவாக உடனடியாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த சமீபத்திய சவால்கள், வெளியில் இருந்து வரும் பிரச்னைகளையும், மந்த காலங்களையும் சமாளிக்கத் தேவையான திறன்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதைக் தெளிவாக உணர்த்தியுள்ளது.

பாராட்டு



அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை முடிக்க உதவிய இந்திய அரசுக்கும், கடினமான காலத்திலும் ஆதரவு வழங்கிய அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றிகள்.



அதேபோல், தள்ளுபடி விலைகளில் ஏற்றுமதி செய்து, survival exports அணுகுமுறையை பின்பற்றி, தங்கள் நிறுவனங்களையும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்கையும் பாதுகாத்த இந்திய ஏற்றுமதியாளர்களின் தாங்கும் மனப்பாங்கையும் பாராட்டுகிறோம். எதிர்காலத்தில், போட்டித்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்க ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.



ஓப்பன் என்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேசன் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: அமெரிக்க அரசு, இந்திய ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50% இலிருந்து 18% ஆகக் குறைத்துள்ள அறிவிப்பு, இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய பலனை அளிக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். நமது அண்டை நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை விட, இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி குறைவாக இருப்பதால், வரும் நாட்களில் அமெரிக்காவிற்கு இந்திய ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலுள்ள ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு நூல் வழங்கும் OE மில்கள் மற்றும் ஸ்பின்னிங் மில்களும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். அமெரிக்காவின் இந்த இறக்குமதி வரி குறைப்பு, மேலும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்படும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை இணைந்து, வரும் காலங்களில் இந்திய ஜவுளி துறைக்கு அபார வளர்ச்சியை அளிக்கும். இதன் விளைவாக, ஜவுளி துறையில் வேலைவாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அருள்மொழி கூறினார்.

Advertisement