கான்கிரீட் உதிர்ந்த மின் கம்பத்தால் வட்டம்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: வட்டம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கான்கிரீட் உதிர்ந்து, விபத்து அபாயம் ஏற்படும் வகையில், முழுதும் சேதமடைந்து உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, வட்டம்பாக்கம் பிரதான சாலையோரம், மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கின்றன.

இதில், வட்டம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள மின் கம்பம், கான்கிரீட் உதிர்ந்து முழுதும் சேதமடைந்து உள்ளது.

கிராம மக்கள் சென்று வரும் பிரதான சாலையில், விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அப்பகுதி மக்கள் விபத்து அபாயம் ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்

எனவே, மின் வாரிய அதிகாரிகள் சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Advertisement