சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கைது

மதுரை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மறியலில் 6 ஆண்கள், 91 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் நுார்ஜகான் துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அங்காள ஈஸ்வரி, மேகலா, கலைச்செல்வி, ஆக்டோ-ஜியோ மாவட்ட அமைப்பாளர் சின்னப்பொன்னு தலைமை வகித்தனர்.

சத்துணவு பணியாளர்களுக்கு அகவிலைப்படி ரூ.6,750 வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்டச் செயலாளர் மாரி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சோலையன், ஆக்டோ-ஜியோ இணை அமைப்பாளர் ஆரோக்கிய தாஸ், நிதிக்காப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன், ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க செயலாளர் மேனகா பங்கேற்றனர்.

Advertisement