ஆர்ஏசி டிக்கெட் ஒதுக்கப்பட்டால் பயணிகளுக்கு பாதி கட்டணம்; பார்லி. குழு பரிந்துரை

புதுடில்லி: ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி முறையில் பகுதியளவு மட்டுமே படுக்கை ஒதுக்கப்பட்டால், பாதி டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று பார்லிமென்ட் பொதுகணக்குக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து பார்லி. பொதுக்கணக்குக் குழுவானது ரயில்வே துறை சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு;

ரயிலில் பயணிகளுக்கு முழு படுக்கை வசதி தரப்படாமல், பகுதியளவே ஒதுக்கப்படும் ஆர்ஏசி முறையில் முழு பயண கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது.

ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரும் விதிமுறைகளை ரயில்வே அமைச்சகம் உருவாக்க வேண்டும்.

சராசரியாக 55 கிமீ வேகத்தில் இயங்கும் ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வரையறுக்கும் முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதி விரைவு ரயில்களுக்கான சராசரி வேகத்தை 100 கிமீ ஆக அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு பார்லி. பொதுக்கணக்குக் குழு கூறி உள்ளது.

Advertisement