வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் சிலிகுரி சுரங்க ரயில் பாதை திட்டம்: நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

1

புதுடில்லி: நாட்டின் எல்லையோர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், 'சிலிகுரி' பிரமாண்ட சுரங்க ரயில் பாதை திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில், முக்கியத்துவம் வாய்ந்த, 'சிக்கன் நெக்' வழித்தடம் வழியாக, சுரங்க ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது; இது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திறன் இரண்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளம், பூட்டான் மற்றும் வங்க தேசம் இடையே உள்ள, நம் நாட்டின் சிறிய நிலப்பரப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் தான், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி வழியாக செல்லும், 40 கி.மீ., நீளமுள்ள வழித்தடத்தில், புதிய சுரங்க ரயில் பாதை அமைக்கப்படுகிறது. பின்னர், இந்த வழித்தடத்தை சிலிகுரியிலில் இருந்து, அசாம் மாநிலம், கவுஹாத்தி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.

வணிக கண்ணோட்டத்தில், சிலிகுரி வழித்தடம் முக்கிய நுழைவாயிலாக மாறும். நம் நாட்டின் எல்லையோர பகுதிகளில், சீனாவின் செயல்பாடுகள் அடிக்கடி மாற்றுவதோடு, சில கட்டமைப்புகளை வலுப்படுத்தியும் வருகிறது. இந்த சூழலில், இந்த வழித்தடத்தின் பங்கு இன்னும் முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இது குறித்து, வடக்கு எல்லையோர மண்டல ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே போக்குவரத்து என இரண்டையும் இணைத்து, இந்த சுரங்க ரயில் பாதை திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே ரயில் பாதையாக இது இருக்கும்.

இந்த புதிய திட்டம், இதர மாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். பூமியின் கீழ், 20 முதல் 24 மீட்டர் ஆழத்தில், சுமார் 40 கி.மீ., துாரம் பிரமாண்ட சுரங்க பாதை அமைத்து, அதில் ரயில்கள் இயக்கப்படும்.

இந்த பாதையை எளிதில் கண்டறியவோ அல்லது சேதப்படுத்தவோ முடியாத அளவுக்கு வடிவமைக்கப்படும். தேச விரோத நடவடிக்கை, நாசவேலை அல்லது துல் லியமான தாக்குதல்கள் உள்ளிட்ட தீவிர சூழ்நிலைகளில் கூட, இந்த ரயில் பாதையும், ரயில் போக்குவரத்து இணைப்பும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதே முதன்மை நோக்கம்.

கடினமான சூழ்நிலைகளிலும் கூட ரயில் செயல்பாடுகளை தொடர முடியும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். வழக்கமான ரயில் பாதையை காட்டிலும், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதால், திட்ட மதிப்பீடு அதிகமாக இருக்கும். மேலும், இதற்கான நிதியை, மத்திய அரசு நேரடியாக ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த சுரங்க ரயில் பாதை, தனித்துவமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement