பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு கவர்னர் கடிதம்

பந்தலூர்: நீலகிரியைச் சேர்ந்த பழங்குடியின ஓவியர், கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட நிலையில், விருது வாங்குவதற்கு கவர்னர் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.


நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 52. ஆலு குறும்பா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இவர், தங்கள் கலாச்சாரம் குறித்த நிகழ்வுகளை, இயற்கையான முறையில் ஓவியமாக வரைந்துள்ளார். பல்வேறு விருதுகளை வாங்கிய இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


இந்நிலையில் கடந்த மாதம் இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில், குடிசையில் வாழ்ந்து வரும் இவரின் குடும்பம், விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தாலும், ஏழ்மை நிலையில் மனவேதனையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, பல்வேறு தரப்பினரும் உதவுவதாக உறுதி அளித்துள்ள நிலையில், நேற்று விருது வாங்குவதற்கு தமிழக கவர்னர் ரவி கையொப்பமிட்ட அழைப்பு கடிதம், சுசிலாவிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சுசிலா கூறுகையில், விருது அறிவிக்கப்பட்டது முதல் எந்த தகவலும் இல்லாமல் இருந்தோம். தற்போது தமிழக கவர்னரை எங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் விருது வாங்க எனது கணவர் இல்லை என்று வேதனையாக உள்ளது. 23ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளதாகவும், டில்லி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வெளியில் எங்கும் சென்று பழக்கம் இல்லாத நாங்கள், எனது கணவரின் உழைப்பால் டில்லி வரை சென்று விருது வாங்க உள்ளோம் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எங்களுக்கு விருது அறிவித்த அரசு நிர்வாகத்திற்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம் என்றார்.

Advertisement