ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு: உடந்தையாக இருந்த இருவர் கைது

ஆவடி: திருவொற்றியூரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டை, ராம அரங்கண்ணல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமதி, 57. இவருக்கு, திருவொற்றியூரில், 1,200 சதுர அடி இடம் உள்ளது.

அந்த இடம், தன் கணவர் ராஜா சண்முகம் என்பவருக்கு சொந்தமானது என, அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் கூறி வந்துள்ளார்.

பின், அந்த இடத்தின் பொது அதிகாரத்தை, பெருமாள் சாமி என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளார்.

தகவலறிந்த சந்திரமதி, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று, கடந்த 2023ம் ஆண்டு முறையிட்டார்.

இருதரப்பிலும் நடத்தப்பட்ட விசாரணையில், ரேவதி போலியான ஆவணங்கள் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அதன் தற்போதைய மதிப்பு, 1 கோடி ரூபாய்.

இந்த நிலையில், தன் நிலத்தை அபகரித்த ரேவதி, சங்கர், பெருமாள் சாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சந்திரமதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார், மோசடிக்கு உடந்தையாக இருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த சங்கர், 62 மற்றும் பம்மல் பகுதியைச் சேர்ந்த பெருமாள் சாமி, 54, ஆகியோரை கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான ரேவதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

Advertisement