இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்

1

மும்பை: 'டி-20' உலக கோப்பை தொடரை அமர்க்களமாக துவக்கியது இந்தியா. நேற்று தனது முதல் லீக் போட்டியில், 29 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. கேப்டன் சூர்யகுமார் 49 பந்தில் 84 ரன் எடுத்தார்.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நேற்று துவங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற அமெரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் உடல்நிலை சரியில்லாத பும்ரா இடம் பெறவில்லை. முழங்கால் காயத்தால் விலகிய ஹர்ஷித் ராணாவுக்குப் பதில், முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.
அதிர்ச்சி துவக்கம்
இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் ஜோடி துவக்கம் கொடுத்தது. சவுரப் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்து, அணியின் ரன் கணக்கைத் துவக்கினார் இஷான். அடுத்து அலி கான் வீசிய 2வது ஓவரின், 2வது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சித்தார். இதை, பவுண்டரி எல்லையில் கிருஷ்ணமூர்த்தி 'கேட்ச்' செய்ய, அபிஷேக் 'டக்' அவுட்டாகி திரும்பினார்.
மூன்று விக்கெட்
இஷான், திலக் வர்மா இணைந்தனர். சவுரப் வீசிய போட்டியின் 3வது ஓவரில் திலக் வர்மா, ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன. தொடர்ந்து ஷாத்லே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் திலக் வர்மா. 10 ரன்னில் தப்பிய இஷான், அலி கான் வீசிய 5வது ஓவரின் கடைசி இரு பந்துகளை 4, 6 என விளாசினார்.
போட்டியின் 6வது ஓவரை வீசினார் ஷாத்லே. 2வது பந்தில் இஷான் (20) அவுட்டானார். 5வது பந்தை 'மிட் விக்கெட்' பகுதியில் அடித்தார் திலக் வர்மா. அங்கிருந்த அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல், எளிதாக 'கேட்ச்' செய்ய, திலக் வர்மா (25) பெவிலியன் திரும்பினார்.
வந்த வேகத்தில் 6வது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற ஷிவம் துபே, 'கோல்டன் டக்' அவுட்டானார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 46/4 என திணற, ஒட்டுமொத்த மைதானமும் 'ஷாக்' ஆனது.
சூர்யகுமார் நம்பிக்கை
கேப்டன் சூர்யகுமார், ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து அணியை மீட்க முயற்சித்தனர். சுபம் வீசிய 10 வது ஓவரில் சூர்யகுமார் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ரிங்கு சிங் (6) அவுட்டாக, ஹர்திக் பாண்ட்யா வந்தார். ஹர்மீத் சிங் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, 5 ரன்னில் அவுட்டாகி சென்றார்.
சவுரப் வீசிய 16வது ஓவரின் முதல் இரண்டு பந்தை அக்சர் படேல், பவுண்டரிக்கு அனுப்பினார். கடைசி இரு பந்தில் சூர்யகுமார் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, 21 ரன் கிடைத்தன. இந்திய அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 115/6 ரன் எடுத்தது. அடுத்த சில நிமிடத்தில் அக்சர் படேலும் (14) வெளியேறினார்.
தனிநபராக போராடிய சூர்யகுமார், 36 பந்தில் அரைசதம் கடந்தார். அர்ஷ்தீப் (4) நிலைக்கவில்லை. ஷாத்லே வீசிய கடைசி ஓவர், முதல் 4 பந்தில், சூர்யகுமார் 4, 6, 6, 4 என விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 161/9 ரன் எடுத்தது. சூர்யகுமார் (84 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.
சிராஜ் அபாரம்
அமெரிக்க அணிக்கு ஆன்ட்ரிஸ் (6), சாய்தேஜா (2), மோனன்க் (0) ஏமாற்றம் தந்தனர். மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி (37) ஆறுதல் தந்தனர். சிராஜ் வீசிய கடைசி பந்தில் சுபம் (37) வீழ்ந்தார். அமெரிக்க அணி 20 ஓவரில் 132/8 ரன் எடுத்து தோற்றது. சிராஜ் 3 விக்கெட் சாய்த்தார்.

கோலாகல துவக்கம்
'டி-20' உலக கோப்பை துவக்கவிழா நேற்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. சிவமணி 'டிரம்ஸ்' நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நடிகை நோரா படேஹியின் நடனம் ஆடினார். முடிவில், 2024ல் 'டி-20' கோப்பை வென்று தந்த கேப்டன் ரோகித் சர்மா, ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா இணைந்து, உலக கோப்பையை மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.

77 ரன்
ஐ.சி.சி., உறுப்பு அணிகளுக்கு எதிரான 'டி-20' போட்டியில், இந்திய அணி, குறைந்த ரன்னில் (77), முதல் 6 விக்கெட்டுகளை இழந்தது, நேற்று முதன் முறையாக நடந்தது.

46/4 ரன்
கடந்த 2024, உலக கோப்பை தொடருக்குப் பின் சொந்தமண்ணில் நடந்த 'டி-20' போட்டிகளில், 'பவர்பிளே' ஓவரில் இந்திய அணி மூன்றாவது குறைந்த ஸ்கோரை நேற்று (46/4) பதிவு செய்தது.
* 'பவர் பிளே' ஓவரில் இந்திய அணி, 6வது முறையாக 4 விக்கெட்டுகளை இழந்தது. 'டி-20' உலக கோப்பையில் இது இரண்டாவது முறை. முன்னதாக 2016, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 29/4 என திணறியது.

முதன் முறை
இந்திய 'டி-20' அணியின் 'டாப்-3' வரிசையில், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா என மூன்று இடது கை பேட்டர்கள், முதன் முறையாக இடம் பெற்றனர். இதற்கு முன் 1999ல் ஒருநாள் போட்டியில் இதுபோல, முதல் 3 இடத்தில் இடதுகை வீரர்கள் களமிறங்கினர்.

முதல் 'டக்'
'டி-20' உலக கோப்பை அறிமுக போட்டியில் 'டக்' அவுட்டான, 5வது இந்திய வீரர் ஆனார் அபிஷேக். முன்னதாக காம்பிர், ஆஷிஸ் நெஹ்ரா, ஷர்துல் தாகூர், தீபக் ஹூடா இதுபோல அவுட்டாகினர்.

Advertisement