திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுப்பதால் சர்ச்சை

10

சென்னை: 'பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், நான் வெளியேறுவேன்' என்று வி.சி., தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். 'தி.மு.க., கூட்டணியில், தங்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, பொதுவெளியில் வலியுறுத்தி உள்ளார். கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும், தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பனிப்போர்



தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இம்முறை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., தங்கள் கூட்டணியில் சிறிய கட்சிகளை சேர்க்க காய் நகர்த்தி வருகின்றன. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது; இது, தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.



இந்நிலையில், மற்ற கட்சிகளும் குடைச்சலை துவங்கி உள்ளன. நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.


அப்போது, அவர் கூறியதாவது: மதத்தின் அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பா.ஜ., பரப்புகிறது. அதேபோல், ஜாதி அடிப்படையில், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பா.ம.க., பரப்பியது. சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்தி, நிலையான பகையை வளர்க்கக் கூடிய, இந்த இரண்டு கட்சிகளுடன், நாங்கள் எந்த காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.


அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்த கட்சிகள் இடம் பெறும் கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம் என்ற முடிவை, ஏற்கனவே எடுத்துள்ளோம். அந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும், எங்களுக்கு உள்ளது. ஆனால், தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க, நாங்கள் ஒரு நாளும் விரும்பவில்லை. தி.மு.க., ஒரு முடிவை எடுத்தால், அது எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தால், நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி கிடையாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. அதில், நாங்கள் எந்தவித சமரசமும் செய்யவில்லை.


அவ்வப்போது வரும் தேர்தலுக்காக, எங்கள் நிலைப்பாட்டை, நாங்கள் மாற்றிக் கொள்ள கூடாது. கருத்தியல் சார்ந்த பயணத்தில், நம்பகத்தன்மையை வளர்க்க வேண்டும். அதை எப்போதும் இழந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில், நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



சென்னை மண்ணடியில், மனித நேய மக்கள் கட்சியின், 18ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழா முடிந்ததும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், 14 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.,க்களாக இருக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.ம.க., இடம் பெற்றுள்ளது. கூட்டணியின் வெற்றிக்காக, ம.ம.க., தொண்டர்கள் அயராது பாடுபடுவர். இத்தேர்தலில் ம.ம.க.,வுக்கு ஐந்து தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்க வேண்டும்.


அதேபோல், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் உள்ள சிறுபான்மையினர்களுக்கு, உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கூடுதல் தொகுதி கேட்பது, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கிடையாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதிகமான தொகுதிகள் கேட்பது வழக்கமானதுதான். பா.ஜ.,வின் நெருக்கடியை சமாளிக்கும் முதல்வர் ஸ்டாலின், இதையும் சுமூகமாக கையாண்டு, வெற்றிக் கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினர்.


தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்பதும், தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் மவுனம் காப்பதும், கூட்டணிக்குள் சர்ச்சையையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement