ரூ.4.50 லட்சம் மதிப்பு கஞ்சா: அம்பத்துார் அருகே பறிமுதல்

அம்பத்துார்: அம்பத்துார் அருகே, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; ஒடிஷா நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சென்ட்ரல், பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், அம்பத்துார் அடுத்த பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே, கஞ்சா சப்ளை செய்வதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சூட்கேசுடன் நின்ற வடமாநில நபரிடம் விசாரித்தனர்.

அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, அவரது பையை சோதனை செய்தனர். இதில், 30 கிலோ கஞ்சா சிக்கியது. அதன்மதிப்பு 4.50 லட்சம் ரூபாய்.

போலீசாரின் விசாரணையில், ஒடிஷா மாநிலம், கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த சிப்ரியன் கரடா, 45, என்பதும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. விசாரணைக்குபின் அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement