காங்., - எம்.பி.,யின் பாக்., தொடர்பை விசாரிக்க அசாம் முதல்வர் பரிந்துரை

குவஹாத்தி: ''காங்., - எம்.பி., கவுரவ் கோகோய்க்கு, பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் விவகாரம், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், மத்திய அரசு விசாரிப்பதே சரியாக இருக்கும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியான காங்., இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

குற்றச்சாட்டு




அசாமில், காங்கிரசின் முகமாக, அக்கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கவுரவ் கோகோய் அறியப்படுகிறார். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்போர்ன் என்பவரை, 2013ல் கவுரவ் கோகோய் திருமணம் செய்தார்.


நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2011 மார்ச் முதல் 2012 மார்ச் வரை எலிசபெத் பணியாற்றியதாகவும், அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த அலி தவுகீர் ஷேக் என்பவருடன் அவருக்கு நட்பு இருந்தாகவும், கவுரவ் கோகோய்க்கும் பாக்., உடன் தொடர்பு இருந்ததாகவும், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குற்றஞ்சாட்டினார். இதை, கவுரவ் கோகோய் திட்டவட்டமாக மறுத்தார்.


இது குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, கடந்த ஆண்டு செப்டம்பரில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது . இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன' என்றார்.


இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில், கவுரவ் கோகோயின் பாக்., தொடர்பு குறித்த வழக்கை, மத்திய அரசிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.


வீண் பழி




கூட்டத்துக்கு பின், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளதாவது: கவுரவ் கோகோயின் பாக்., தொடர்பான வழக்கை விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம். தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் என்பதால், மத்திய அரசு விசாரிப்பதே சரியாக இருக்கும்.


கவுரவ் கோகோய் தன் தந்தை தருண் கோகோய் முதல்வராக இருந்த போது, மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். டில்லியில் உள்ள பாக்., துாதரகத்திற்கு ஒரு குழுவை அழைத்துச் சென்று, அப்போதைய துாதர் அப்துல் பாசித்தை அவர் சந்தித்து உள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.


எம்.பி., பதவியில் இருக்கும் கவுரவ் கோகோயின் பாக்., தொடர்புகள் குறித்து நாங்கள் விசாரிக்க வில்லை. அவரது பதவிக்கு மரியாதை அளித்து, அதை மத்திய அரசிடம் விட்டு விடுகிறோம்.

கவுரவ் கோகோய் மீது அசாம் போலீஸ் இப்போதே கைது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால், சட்டசபை தேர்தலுக்கு முன், பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக என் மீது தேவையின்றி பழி சுமத்துவர்.


பெரிய விவகாரம்




அதனால் தான் இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். இந்த வழக்கு ஒரு தனிப்பட்ட விவகாரம் அல்ல. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத், பாக்., நாட்டவர் அலி தவுகீர் ஷேக் ஆகியோர் சம்பந்தப்பட்டது. கவுரவ் கோகோயின் மனைவி எலிசபெத், அலி தவுகீர் ஷேக் உடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்துள்ளார் . பாக்., அரசு சார்ந்த அமைப்புகளில் அவர் பணியாற்றி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

@quote@

பரிதாபப்படுகிறேன்!


முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் குற்றச்சாட்டுகள் அறிவற்றவை; போலியானவை. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, 'சி' -கிரேடு சினிமாவையும் விட மோசமாக இருந்தது. இரண்டரை மணி நேரம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உருப்படியாக எதுவுமே கூறவில்லை. அங்கிருந்த பத்திரிகையாளர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். அசாமில் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

- கவுரவ் கோகோய், லோக்சபா எம்.பி., - காங்.quote

Advertisement