ஜெ., சசி சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்புக்கு முன் திக்...திக்... நிமிடங்கள்
உச்சநீதிமன்றத்தின் பல முக்கியமான, அதே சமயம் சிக்கலான வழக்குகளின் தீர்ப்புகளை என்.டி.டி.வி.,யில் ரிப்போர்ட் செய்துள்ளேன். 7 நீதிபதிகள் அமர்வு, 5 நீதிபதிகள் அமர்வு என தீர்ப்பு வந்த அடுத்த 5வது நிமிடத்தில் உச்ச நீதிமன்ற புல்வெளியில் கேமரா முன் நின்று செய்தி வாசிப்பாளரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தீர்ப்பை மக்களுக்கு புரிகிற மாதிரி விளக்க வேண்டும். இதற்கு அந்த வழக்கின் விவரங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்பட்டால் என்னாகும்?
மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் என்னாகும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் சில சமயம் நீதிபதிகள் மனு தள்ளுபடி அல்லது ஏற்றுக் கொண்டோம் என ஒரே வரியில் முடித்துவிடுவார்கள். வழக்கின் விவரங்கள் தெரியவிட்டால் கேமரா முன் தடுமாற வேண்டியிருக்கும். நான் ரிப்போர்ட் செய்த வழக்குகளில் பரபரப்பையும், வேலை போய்விடுமோ என்கிற பயத்தையும் ஏற்படுத்திய வழக்கு ஒன்று உண்டு என்றால், அது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சம்பந்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்குதான்.
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு
இந்த வழக்கிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டார் என 1996 ஜூன் மாதம் கீழமை கோர்ட்டில் புகார் அளித்தார். உடனே இதை விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். பிறகு இந்த வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பளித்தது கீழமை நீதிமன்றம். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம். சிறைக்கு சென்ற ஜெயலலிதா, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா மற்றும் இரண்டு பேரையும் 2015 மே மாதம் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார் சீனியர் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ். ஜூன் 2016, 7ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணையை முடித்துக் கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது. தீர்ப்பு வருவதற்கு முன் நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவு
எப்போது தீர்ப்பு வரும் என அனைத்து அரசியல்வாதிகளும் காத்திருந்தனர். இதற்கிடையே உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். இவர் மறைவால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்னாகும் என பல சந்தேகங்கள்.
அத்துடன், தீர்ப்பு எப்போது வரும் என ஒரு பக்கம் அரசியல்வாதிகள்; இன்னொரு பக்கம் பத்திரிகை நிருபர்கள் என ஒரு பெருங்கூட்டமே தீர்ப்பிற்காக காத்திருந்தது.
ஜெ., மறைவுக்கு பின், தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. முதல்வராக இருந்த ஓபிஎஸ் கட்டாயப்படுத்தப்பட்டு, ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இத்தகைய சூழ்நிலையில் தான் அந்த 'டுவிஸ்ட்' ஏற்பட்டது.
ஒரு தகவல்
பொதுவாக பத்திரிகையாளர்கள் மேல் மட்டத்தில் இருப்பவர்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒரு சிலர், கீழே டிரைவரிலிருந்து பியூன் வரை பலருடனும் நட்போடு பழகுவார்கள். இவர்கள் மூலமாகவும் சில சமயம் செய்திகள் கிடைக்கலாம். அப்படி உச்ச நீதிமன்றத்தில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் அடிக்கடி பேசுவேன். நீதிபதிகள் குறித்தும், நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் மீட்டிங் எப்போது நடக்கிறது என்பது குறித்தும் தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.
திடீரென ஒரு நாள் நான் பத்திரிகையாளர் அறையில் இருக்கும் போது என்னிடம் வந்தார் அந்த நண்பர். என்னை தனியாக வெளியே அழைத்தார். “சசிகலா ஜெயிலுக்கு போவார்... கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப் போகிறது,” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'எப்போது தீர்ப்பு வரும்' என தெரியாத நிலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறாரே...!
“தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அதிர்ச்சி நீங்காதவனாக கேட்டேன் நான். என்னைப் பார்த்து புன்னகைத்தார். “அதைப் பற்றியெல்லாம் கேட்காதீர்கள்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இப்படி யாரோ சொன்னதையெல்லாம் எப்படி நம்புவது? எப்படியிருந்தாலும் அந்த தீர்ப்பு வந்த பிறகுதான் செய்தியே போட முடியும். எனவே இந்த விஷயத்தை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.
நாளை தீர்ப்பு
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி. வழக்கம் போல உச்ச நீதிமன்றம் படு பிஸியாக இருந்தது. மதியம் 12 மணி. அந்த நண்பர் என்னிடம் வந்தார். “நாளைக்கு ஜெயலலிதா வழக்குல தீர்ப்பு...” பரபரப்பு தொற்றிக் கொண்டது. “உண்மையா? நம்பலாமா,” என்று கேட்டேன், நான். “சார் என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். நான் எதற்கு பொய் சொல்லப்போகிறேன்…நீங்கள் Flash செய்துவிடுங்கள்...,” என்று உறுதியாக கூறினார், அவர்.
பொதுவாக நாளைக்கு என்ன வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது மாலை 6 மணிக்கு மேல்தான் தெரியவரும். முதலில் ஒரு பட்டியல் உச்ச நீதிமன்ற வெப்சைட்டில் வெளியாகும். பிறகு இரவு 7 மணி சுமாருக்கு இன்னொரு பட்டியல் வெளியாகும். இதை சப்ளிமென்டரி லிஸ்ட் என்பார்கள். இந்த லிஸ்டில்தான் மறுநாள் என்ன தீர்ப்புகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
“ லிஸ்ட் வராமல் எப்படி Flash போட முடியும்...,” என்றேன் நான்.
“சார்…நாளைக்குத்தான் ஜட்ஜ்மென்ட்… நியூஸ் போடவில்லை என்றால் பிறகு வருத்தப்படுவீர்கள்...,” என்று கூறிவிட்டார் அவர்.
ஒரே குழப்பம். என்ன செய்வது? மீண்டும் 3 மணிக்கு அந்த நண்பர் வந்தார். “ என்ன சார் இன்னும் நியூஸ் Flash ஆகலையே உங்க டிவியில...,'' என்றார். “இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்...” என்றேன் நான்.
திரும்பவும் 4 மணிக்கு எனக்கு போன் செய்தார் அந்த நண்பர். அப்போதும் இதையேதான் சொன்னார். நாளைக்கு ஜட்ஜ்மென்ட்.
நடப்பது நடக்கட்டும்
சுமார் 4.45க்கு முடிவெடுத்தேன். நடப்பது நடக்கட்டும். இந்த செய்தியை Flash செய்துவிட வேண்டும். உடனே அலுவலகத்திற்கு மெயில் அனுப்பினேன். 'ஜெயலலிதா- சசிகலா தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளது' என்பது நான் அனுப்பிய செய்தியின் சாராம்சம். உடனே செய்தி பிரேக்கிங் நியூஸாக மாறியது.
5 மணிக்கு கேமரா முன் நின்று இந்த வழக்கு பற்றி விரிவாக எடுத்து சொன்னேன். 'நாளை தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது' என சொல்லி, பின்னால் தீர்ப்பு வராவிட்டால் என்னை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற ஒரு நப்பாசை. எங்கள் டிவியைப் பார்த்து மற்ற சேனல்கள் எல்லாம் அவர்களுடைய நிருபர்களிடம், 'என்.டி.டி.வி.,யில் செய்தி வருகிறதே உங்களுக்கு தெரியாதா' என கேட்க ஆரம்பித்தனர்.
லிஸ்ட் வராத நிலையில் நீங்கள் எப்படி Flash செய்யலாம் என சக நிருபர்கள் என்னையும் என் ஹிந்தி ரிப்போர்ட்டர் ஆஷிஷ் பார்கவாவையும் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். ''நாளைக்கு தீர்ப்பு வருகிறது. செய்தி போடுவதும் போடாததும் உங்கள் விருப்பம்,'' என சொல்லிவிட்டேன். ஆனால் மற்ற சேனல்கள் இந்த செய்தியை ப்ளாஷ் செய்யவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்ற வழக்குகள் லிஸ்டிற்காக அடிக்கடி வெப்சைட்டைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் அடிக்கடி என்னுடன் தொடர்பில் இருப்பவர். என் Flash செய்தியைப் பார்த்துவிட்டு போன் செய்தார். 'தீர்ப்பு எப்படியிருக்கும்' என கேட்டார். 'அந்த அம்மா ஜெயிலுக்கு போவது உறுதி' என்றேன். “உண்மையா” என்றார், அவர்.
“நிச்சயம்…கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படும்” என்றேன், நான்.
“என் தலைவரிடம் இதைச் சொல்லலாமா,” என்றார், அவர்.
“அது உங்கள் இஷ்டம்,'' என்று கூறி முடித்துக் கொண்டேன், நான்.
சிறிது நேரத்திற்கு பிறகு உச்ச நீதிமன்ற நண்பர் வந்தார். ''கடைசியில் ப்ளாஷ் செய்துவிட்டீர்களே, சந்தோஷம்... அந்த அம்மா ஜெயிலுக்கு போறாங்க சார்,'' என்றார் மீண்டும். “இதை எப்படி ப்ளாஷ் செய்ய முடியும்…நாளை காலை வரை காத்திருப்போம்” என்றேன் நான். என்னதான் Flash போட்டுவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு பயம். ஒரு வேளை நாளை தீர்ப்பு வராவிட்டால் என்னாகும்?
அப்பாடா!
நானும் ஆஷிஷும் அடிக்கடி உச்ச நீதிமன்ற வெப் சைட்டை பார்த்துக்கொண்டிருந்தோம். எப்போது சப்ளிமென்டரி லிஸ்ட் வெளியாகும் என ஆவலோடும் ஒருவித பயத்தோடும் காத்திருந்தோம். மணி 6 ஆனது... லிஸ்ட் இன்னும் வரவில்லை. ஆனால் எங்கள் சேனலில் இந்த செய்திதான் டாப் நியூஸ். 'தீர்ப்பு நாளைக்கு வெளியாகாமல் இருக்க வேண்டுமே' என சக நிருபர்கள் வேண்டிக்கொண்டிருப்பதாக ஆஷிஷ் என்னிடம் சொன்னான்.
அப்படி லிஸ்டில் தீர்ப்பு இல்லையென்றால் என்ன செய்வது? அதிக பட்சம் இந்த நியூஸை எடுத்துவிட வேண்டியதுதான் என்றேன். செய்தித்தாளில் ஒரு செய்தி வந்த பிறகு எதுவும் செய்ய முடியாது. ஆனால் டிவியில் அப்படியில்லை, உடனே நீக்கிவிடலாம்.
மணி 6:30 ஆனது. லிஸ்ட் வந்தபாடாக இல்லை. எங்கள் இருவருக்குமே டென்ஷன் அதிகமாகியது. “உங்க நண்பர் சொன்னதை வைத்து செய்தி போட்டுவிட்டோமே... தவறு செய்துவிட்டோமா” என ஆஷிஷ் பரிதாபமாக என்னைப் பார்த்தான். “கவலைப்படாதே…அவர் பொய் சொல்ல மாட்டார்... தீர்ப்பு வரவில்லை என்றால் பெரிதாக என்னாகி விடும்? ஆபீஸில் கேள்வி கேட்பார்கள்... நீ என் மீது பழியைப் போடு,” என்று கூறி, அவனைச் சமாதானப்படுத்தினேன்.
6:45க்கு லிஸ்ட் வெளியானது... கை கால் ஓடவில்லை. நாளை காலை 10.30க்கு தீர்ப்பு என லிஸ்டில் போட்டிருந்தது. 'அப்பாடா' என நானும் ஆஷிஷும் பெருமூச்சு விட்டோம். மிகவும் டென்ஷனான தருணங்கள், ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. உடனே சக நிருபர்கள் எங்களைப் பாராட்டினார்கள். இந்த விஷயம் உண்மையாகி விட்டதால், 'அந்த அம்மா ஜெயிலுக்கு போறாங்க' என அந்த நண்பர் சொன்னதும், 'உண்மையாகத்தான் இருக்கும்' என நம்பினேன்.
எனவே, தீர்ப்பு அவர் கூறியபடி இருந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே தகவல்களை தயார் செய்து வைத்துக் கொண்டேன்.
அதிரடி
மறுநாள் காலை 8 மணியிலிருந்தே உச்ச நீதிமன்ற புல்வெளியிலிருந்து 'லைவ்' செய்ய ஆரம்பித்தோம். அலுவலகத்திற்கு போன் செய்து, 'தீர்ப்பு எப்படி வரப் போகிறது' என்பதைச் சொன்னதோடு, 'அதற்கு தயாராக இருங்கள்' எனவும் சொல்லிவிட்டேன். 'சசிகலாவுக்கும், மற்ற இருவருக்கும் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு' என என் மொபைல் போனில் செய்தி ஸ்கிரிப்ட் தயாராக வைத்துக் கொண்டேன்.
இதையே ஆஷிஷ் ஹிந்தியில் எழுதி வைத்துக் கொண்டான். தீர்ப்பு வந்ததும் போனில் ஒரு தட்டு தட்டினால் ஆபீஸுக்கு மெயில் போய்விடும்; அந்தளவுக்கு இருவரும் தயாராக இருந்தோம். 10:30 மணிக்குதான் தீர்ப்பு என்றாலும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 10:00 மணிக்கே நாங்கள் இருவரும் கோர்ட்டிற்குள் சென்று ஒரு மூலையில் அமர்ந்துவிட்டோம். இப்போது பத்திரிகையாளர்கள் கோர்ட்டிற்குள் மொபைல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் சைலண்ட் மோடில் இருக்க வேண்டும்.
இந்த தீர்ப்பு வந்த போது மொபைல்போனை கோர்ட்டிற்குள் எடுத்து செல்ல முடியாது. ஆனால் இது வக்கீல்களுக்கு பொருந்தாது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் எங்களுக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. இதனால் நாங்கள் போனை உள்ளே எடுத்து செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை. மற்ற நிருபர்கள் மொபைல்போன்களை வெளியே வைத்துவிட்டு உள்ளே வந்தனர். கட்சிக்காரர்கள், தமிழக அதிகாரிகள், வக்கீல்கள் என கோர்ட் நிரம்பி வழிந்தது. சரியாக 10:30 மணிக்கு நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவ ராய் கோர்ட்டிற்குள் வந்து அமர்ந்தனர்.
'தீர்ப்பு நாம் எதிர்பார்த்த மாதிரி இருக்குமா' என நெஞ்சு படபடத்தது. ஆஷிஷும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கோர்ட் மாஸ்டர் நீதிபதி பினாகி சந்திர கோஷிடம் பெரிய பைலைக் கொடுத்தார். “இது பெரிய ஜட்ஜ்மென்ட். எனவே முடிவை மட்டும் சொல்லிவிடுகிறோம். கர்நாடகா உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். கர்நாடக கீழமை நீதிமன்ற உத்தரவு செல்லும்,'' என்று மட்டும் கூறினார் நீதிபதி.
உடனே நாங்கள் இருவரும் எங்கள் மொபைல்போனை எடுத்து தயார் செய்து வைத்திருந்த மெயிலைத் தட்டினோம். அது ஆபீஸ் சென்று சேர்ந்தது. சக நிருபர்களும் வக்கீல்களும் வெளியே ஓடினார்கள். மற்ற சேனல்கள் செய்தி போடுவதற்கு முன் எங்கள் செய்தி Flash ஆகிவிட்டது. 'அப்பாடா, தப்பித்தோம்' என்கிற உணர்வு ஆட்கொண்டது. எத்தனையோ தீர்ப்புகளை என்.டி.டி.வி.,க்காக ரிப்போர்ட் செய்திருந்தாலும் இந்த தீர்ப்பு ஏகப்பட்ட டென்ஷனைக் கொடுத்தது.
இந்த செய்திக்கு காரணமான அந்த நண்பர், பிறகு பல செய்திகளை எனக்கு அளித்துள்ளார். நீதிபதிகளை மட்டுமல்லாமல், இந்த மாதிரியானவர்களையும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதை உணர்த்தியது இந்த தீர்ப்பு. தீர்ப்பு பற்றி அந்த நண்பர் தெரிந்து சொன்னாரா, கணித்துச் சொன்னாரா என இன்றளவும் எனக்குத் தெரியாது; ஆனால், தக்க நேரத்தில் தகவலைச் சொன்னார். செய்தியாளர்களுக்கு 'source' எந்தளவுக்கு முக்கியம் என்பதை நான் உணர்ந்த சம்பவம் இதுதான்!
டெய்ல் பீஸ்
தீர்ப்பு வெளியாவதற்கு முதல் நாள் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் போனில் விசாரித்தார் என்று கூறினேன் அல்லவா? அந்த பிரமுகருக்கு அடித்தது ஜாக்பாட். 'தீர்ப்பு இப்படித்தான் வரும்' என நான் சொன்னதை அவர் கட்சி தலைவரிடம் சொல்லி, அது உண்மையும் ஆகிவிட்டதே! அவருக்கு ஏதோ உச்ச நீதிமன்றத்தில் மிகப்பெரிய Source இருப்பதாக நம்பிய கட்சித் தலைமை, அந்த நபருக்கு பின்னாளில் பெரிய பதவியை கொடுத்து விட்டது.
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: vaithi@dinamalar.in
இந்த செய்தியாளர் காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் சதித் துணையுடன் எல்லா விதிமுறைகளையும் மீறி நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இது நீதிமன்றங்கள் முழுவதும் புற்றுநோய்போல் பரவியுள்ள ஊழலை நிரூபிக்கும் இன்னொரு சாட்சியாகும்.
திக்கு திக்குனு திக்கிட்டு. இனி பக்கு பக்குனு பக்கிடும்.
ஜெயலலிதா செய்த தவறுகள் கட்சியினரின் முகஸ்துதி.. மன்னார்குடி கும்பலின் நட்பு... இதனால் வந்த ஆணவம் ஆகியவை.....
இறுதியில் மர்மமான மரணத்தில் முடிந்தது...
கட்சி சார்பற்ற நல்லவர்களின் ஆலோசனையில் ஆட்சி நடத்தி இருக்கலாம்...
ஆனால் மன்னார்குடி மாஃபியா கும்பல் அவரை யாரும் நெருங்க விடாமல் தடுத்து விட்டது...
ஜெ செய்த ஊழல், சொத்து குவிப்பு எல்லாமே தமிழ்நாட்டில்தான் நடந்தது. கர்நாடகாவில் அல்ல. பின்னர் ஏன் கர்நாடக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் ஜெயாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும்? ஏனென்றால், ஜெயா தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தை வற்புறுத்தியதால் தான். மேலும் சதிகார திமுகவும் காரணம். கருணாநிதியின் அறிவுறுத்தலால் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் ஜெயாவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். கடைசியில் ஜெயா வின் கதையையே முடித்துவிட்டனர். இதிலிருந்து ஓன்று புரிகிறது. இந்த உலகத்தில் பதவி, பவர், பணம், சொத்து, மரியாதை, தரையில் காலில் விழுந்து வணங்கும் மரியாதை எல்லாமே நிரந்தரமற்றது. காமராசரின் புகழ் என்றென்றும் பேசப்படுகிறது அதே நேரத்தில் ஜெ, கருணா போன்றோரை என்றென்றும் இகழ்ந்து தான் பேசப்படும். எல்லாரும் காமராசர் ஆட்சி அமைப்போம் என்கிறார்களே தவிர ஜெ ஆட்சி கருணா ஆட்சி அமைப்போம் என்று சொல்லுவதில்லை. தோன்றிர் புகழோடு தோன்றுக
அந்த காமராசர் ஒரு இந்திரா குடும்பத்திற்கே அடிமை என்பதும் அதனால் இங்கே ஹிந்தி திணிப்பு உட்பட பல ஒன்றிய அரசின் தலையீட்டை தடுக்கவில்லை என்பதும் தனது சாதிக்காரர்கள் மீது அளவு கடந்த பற்று கொண்டு இருந்தார் என்பதும் அதனால் குமரி நாடார்கள் பிளவு பட்டு விடாமல் இருக்க இடுக்கி தேவிகுளம் பீர்மேடு மற்றும் குடகு பகுதிகளை இழக்க காரணம் என்பதும் சாதி மோதல்களை சரிவர கையாளாமல் தூபம் போட்டார் அதனால் தேவர் அவர்களும் இமானுவேல் சேகரன் அவர்களும் பாதிக்க பட்டர்கள் என்பதும் வரலாறு.
தீர்ப்பு என்பது சமூகம், ஆள்பலம், தீர்ப்பு அளிக்கும் நபருக்கு ஏற்படும் பின் பாதிப்பு ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது. பெனால்டி என்பதும் அரசியலின் பொருட்டே அமைகிறது. தர்க்க ரீதியில் அவர் தவறு செய்தார் அல்லது சில குடும்பங்களில் மாட்டி விடப்பட்டார் என்று சொன்னாலும், இப்போது நாட்டில் சில கவுன்சிலர்களின் சொத்தே இதற்கும் மேலே உள்ளது என்பது தான் உண்மை.
அளவு கடந்த சாதி பற்று இவ்வாறு முட்டு கொடுக்க வைக்கிறது என்பதை உணருங்கள்.
அடுத்தவரால் மாட்டிவிட பட அளவுக்கு கூடிய அப்பாவியா அவர்??
அது அவரது ஆளுமைத்திறன் மீது கேள்விக்குறியை உருவாக்குவதை கவனிக்க தவறி விடீர்களே??
கோடநாடு உல்லாச மாளிகையில் அப்பாவியாய் ஏமாளியாய் வாழ்ந்தார் எனும்போது நமக்கு சிரிப்பை விட எரிச்சல் அதிகமாகிறது ????
மக்களால் நான் மக்களுக்காவே நான் என்று மக்களை ஏமாற்றி இப்படி ஊழல் செய்து சொத்துக்குவித்த ஊழல் ராணி அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்று ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து கொண்டு அலையுது. சசி செய்த ஊழலை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று சசியும் மீண்டும் தமிழகத்தை ஆளலாம் என்று கனவு காண்கிறார். நம்முடைய பிரச்னையே மறதிதான். அதனால்தான் சர்க்காரியா கமிஷனால் ஊழல்வாதி என்று குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதியும் பலவருடம்கள் முதல்வராக இருந்தார். திமுக அதிமுக அல்லாத கட்சியின் ஆட்சி மாற்றம் தான் தேவை.
உச்ச நீதி மன்ற தீர்ப்பு கூட முக்கியமானவர்களுக்கு முன்னமேயே பகிரப்படுகிறது.
அருமையான ஸஸ்பென்ஸுடன் கூடிய ரிப்போர்ட்டிங் வைத்தியநாதன்
காலம் கடந்த தீர்ப்பு இது?? வெறும் வெத்து பில்டப்... ???
ஜெ உயிரோடு இருந்தவரை இந்த தீர்ப்பு வராமல் பார்த்து கொண்ட அந்த புண்ணியவான்கள் யாரென்பதுதான் சிதம்பர ரகஸ்யம்.
BJP ruling India in 2016.Enemity between Chidambaram and J and frienship between BJP and J well known to all.Contsiner lorries too protected by Jaitley.
உண்மை என்றுமே நிரந்தரம்.
அந்தப் பரபரப்பான சூழலில் வெளிப்படைத்தன்மையுடன் செய்திகளைச் சேகரிப்பதில் இருக்கும் சவால்களை மிகச் சிறப்பாக விவரித்துள்ளீர்கள். ஒரு செய்தியாளரின் திக் திக் நிமிடங்களையும், இறுதியில் உண்மை வென்றதையும் கேட்கும்போது வியப்பாக இருக்கிறது. நேர்மையான செய்தியாளர்களுக்கு சோர்ஸ் Source எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய அருமையான பதிவு"
எவ்வளவு பெரிய பதட்டமான சூழல் நிலவினாலும், இறுதி வெற்றி என்னவோ உண்மைக்குத்தான் என்பதற்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே சாட்சி. வெளிப்படைத்தன்மை இருக்கும்போது பதட்டம் வருவது இயல்புதான், ஆனால் உண்மை என்றுமே நிரந்தரம் சுவாரசியமான பகிர்வு."மேலும்
-
பிரதமர் மோடி தமிழகம் வருகை முதல் திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,28)!
-
ஸ்டிரைக்கை தொடர்ந்த வருவாய்த்துறையினர்
-
அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்
-
வரிவிதிப்பை ரத்து செய்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்; மறு விசாரணை சாத்தியமா என கேட்கிறார் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் மரணம்; டி.எஸ்.பி.,க்கு எதிரான வாரன்ட் ரத்து
-
'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை