அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம்: ஈரான் அமைச்சர் திட்டவட்டம்

டெஹ்ரான்: போர் திணிக்கப்பட்டாலும், அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம்; அமெரிக்காவின் ராணுவ குவிப்பு தங்களை அச்சுறுத்தாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


மேற்காசிய நாடான ஈரானின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015ல் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்தது. இதை, 2018ல் தன் முதல் பதவி காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முறித்துக் கொண்டார்.


இந்நிலையில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் கைவிட வேண்டும் என, நெருக்கடி கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், தற்போது ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போராட்டங்களை தனக்கு சாதமாக பயன்படுத்தி மீண்டும் புதிய நிபந்தனைகளுடன் அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க டிரம்ப் விரும்புகிறார்.


இதற்காக, ஈரானில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களை காப்பாற்றுவதாக என்று கூறிக் கொண்டு அந்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே, ஒப்பந்தம் தொடர்பாக, மேற்காசிய நாடான ஓமன் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா, ஈரான் பேசி வருகின்றன. இருப்பினும், டிரம்ப் தொடர்ந்து ஈரானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி கூறியுள்ளதாவது: யுரேனியம் செறிவூட்டல் என்பது எங்கள் உரிமை. இதற்காக ஏற்கனவே நாங்கள் பெரும் விலையை கொடுத்துவிட்டோம். இனி போர் திணிக்கப்பட்டாலும் சரி; எங்கள் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம்.


அமெரிக்காவின் ராணுவ குவிப்பை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அணுசக்தி செறிவூட்டலை ஈரான் எந்த நிலையிலும் கைவிடாது. இவ்வாறு கூறினார்.

Advertisement