மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம் வீடுகளுக்கு தீ வைப்பால் பதற்றம் நீடிப்பு

இம்பால்: மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், நுாற்றுக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பொது இடங்களில் கூடவும், போராட்டம் நடத்தவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பழங்குடியினரான கூகி - மெய்டி சமூகத்தினர் இடையே, 2023ல் மோதல் வெடித்தது. தலைநகர் இம்பால் உட்பட மாநிலம் முழுதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். இதில், 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு பொறுப்பேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், கடந்தாண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

எதிர்ப்பு இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால், மாநிலத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.

ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் சமீபத்தில் பதவியேற்றார்.

கூகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., நெப்சா கிப்ஜென், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

மெய்டி சமூகத்தின் தலைமையிலான அமைச்சரவையில், கூகி இனத்தைச் சேர்ந்த நெப்சா கிப்ஜென் இணைந்ததற்கு, கூகி இனத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரை 'துரோகி' என விமர்சித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டிய அவர்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில், இரு சமூகத்தினர் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.

இங்குள்ள லித்தான் கிராமத்தில் தங்குல் சமூகத்தைச் சேர்ந்த நபரை, எட்டு பேர் அடங்கிய கும்பல், கடந்த 7ம் தேதி இரவு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தங்குல் மற்றும் கூகி சமூகத்தினர் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

கூகி இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய குழுவி னர், லித்தான் கிராமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்தவர் கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தடை இந்த மோதல், லித்தான் கிராமம் முழுதும் எதிரொலித்தது. சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் வந்தது.

சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் மஹாதேவ், லம்பூய், ஷாங்காய் மற்றும் லித்தானுக்கு செல்லும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர் போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை லித்தான் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர உக்ருல் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் தாஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொது இடங்களில் கூடவும், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement