சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது

2


நாமக்கல் : சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 57; விவசாயி. இவரது பெயரில் உள்ள, 4 வீடுகளை மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக்கோரி, நாமக்கல் மாநகராட்சியில், 2 வாரங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பெற்ற வருவாய் உதவியாளர் சங்கர், 58, சொத்து வரி மாற்றம் செய்ய, ஒரு வீட்டுக்கு, தலா, 5,000 வீதம், மொத்தம், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கதிர்வேல், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, இன்று மதியம், 1:30 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள டீ கடைக்கு சென்ற கதிர்வேல், அங்கிருந்த வருவாய் உதவியாளர் சங்கரிடம், 20,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.


பணத்தை பெற்றுக்கொண்ட சங்கர், அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், சங்கரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 20,000 ரூபாய் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement