கட்சிகளின் கொடி கம்பங்கள் பிளக்ஸ்களை அகற்ற வழக்கு 13 கலெக்டர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: மதுரை உள்ளிட்ட, 13 தென்மாவட்டங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், பிளக்ஸ்களை அகற்ற தாக்கலான வழக்கில், கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், வடக்கு சாலைக்கிராமம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 13 தென்மாவட்டங்களில், சாலைகள், நடைபாதைகளில் முறையான அனுமதி இன்றி அரசியல், ஜாதி சார்ந்த கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், ஜாதி, அரசியல் தலைவர்களின் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்டம் - ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், பிளக்ஸ்கள், கல்வெட்டுகளை அகற்ற வலியுறுத்தி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜரானார்.

அரசு பிளீடர் திலக்குமார், 'மனுதாரர் கோரும் நிவாரணம் பொத்தாம் பொதுவாக உள்ளது. எந்தெந்த பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லை. தெளிவுபடுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

மதுரை உள்ளிட்ட, 13 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, 8 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement