மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட சுரங்கங்களில் தங்க வேட்டை! உள்ளூர் இளைஞர்களுடன் கேரள கும்பலும் கைகோர்ப்பு
பந்தலுார்: பந்தலுார் தேவாலா சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்களில், கேரள கும்பலுடன் உள்ளூர் இளைஞர்கள் சேர்ந்து தங்க வேட்டையில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பந்தலுார், தேவாலா பகுதிகளில், கடந்த, 1831ல் தங்க படிமங்கள் இருப்பதை கண்டறிந்து, லண்டனை சேர்ந்த ஹூகேனின் என்பவர், 'ஆல்பா கோல்டு மைனிங் கம்பெனி' மூலம் சுரங்க பாதைகள் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து சென்றனர். 1893ம் ஆண்டு தங்கம் எடுப்பதற்கு செலவு அதிகமானதால், அந்த சுரங்க பாதைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, 1901ம் ஆண்டு மீண்டும் ஆங்கிலேயர்கள் முயற்சி மேற்கொண்டாலும் திட்டம் கைவிடப்பட்டது.
அதையடுத்து, கடந்த பல ஆண்டுகளாக, நாடுகாணி, தேவாலா, கைதக்கொல்லி, பொன்வயல், காட்டி மட்டம், கிளன்ராக் பகுதிகளில், 640 ஹெக்டேர் பரப்பளவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்க குழிகள் தோண்டி, தங்க படிமங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் குழிகளில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டும், மண் மற்றும் பாறைகள் மூடி பலரும் உயிரிழந்துள்ளதுடன், இந்த சுரங்க குழிகளில் விழுந்து வன விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன. செக்சன்-17, நிலங்களில் இது போன்ற சட்டவிரோத செயல் நடந்தும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. சுமார் 80 முதல் 200 அடி வரை சுரங்கக் குழிகள் அமைத்து, மண் மற்றும் கற்களை மேலே கொண்டு வந்து, கற்களை அரைத்து துகள்களாக மாற்றி, பாதரசம் மூலம் தங்க படிமங்களை பிரித்து எடுத்து விற்பனை செய்கின்றனர்.
நீரோடையில் பாதரசம் கலப்பு நீரோடைகளில் பாதரசத்தை கலப்பதால், இந்த தண்ணீரை குடிக்கும் மனிதர்கள் மற்றும் வன விலங்குகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தேவாலா காட்டிமட்டம் என்ற இடத்தில், புதிதாக நூற்றுக்கணக்கான சுரங்க குழிகள் அமைத்து தங்க படிமங்களை எடுத்து வருகின்றனர். அதில், தேவாலா பகுதியை சேர்ந்த, 4 பேர், இந்த சுரங்க குழிகள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, இரவு பகல் என சுழற்சி முறையில், 120க்கும் மேற்பட்டோரை பணியில் ஈடுபடுத்தி உள்ளதுடன், தங்க படிமங்களில் ஒரு பகுதி இவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
பணியில் ஈடுபடும் சிறுவர்கள் தங்க படிமங்களை செக்சன்-17 க்கு உட்பட்ட தனியார் தோட்டம் வழியாக எடுத்து வரும் நிலையில், தோட்ட உரிமையாளருக்கும் ஒரு பங்கு வழங்க வேண்டும்.
வன நிலத்தில் முறைகேடாக சுரங்கப்பாதைகள் அமைத்து, அதனை சொந்தம் கொண்டாடும் நபர்கள், சிறுவர்கள், கேரள இளைஞர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி, போதை பழக்கத்திற்கு அடிமையாகி , உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தங்க படிமங்கள் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.டி.ஓ., நேரடி ஆய்வு இந்நிலையில், கூடலுார் ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்தனர்.
ஆர்.டி.ஓ. கூறுகையில், ''மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''இதன் பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வனத்துறை ஆய்வில் வழக்குப்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளது.
எனினும், தற்போது சுரங்க குழிகள் அமைத்து தங்க படிமங்கள் எடுப்பது குறித்து, வனத்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
-
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை ராகுலும், ஸ்டாலினும் முடிவு செய்வர்: செல்வபெருந்தகை
-
விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு