பைக் மீது லாரி மோதி விபத்து; திருப்போரூர் அருகே இருவர் பலி

திருப்போரூர்: சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத், 25. இவர், தன் தோழியான ஆவடியைச் சேர்ந்த சுவேதா, 25, என்பவருடன், நேற்று காலை 9:00 மணியளவில், 'யமஹா ஆர்15' பைக்கில், கூடுவாஞ்சேரி வழியாக இள்ளலுார் 'ஒண்டர்லா' பொழுதுபோக்கு மையத்திற்கு வந்தார்.

அப்போது, கீழ்கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை வளைவு பகுதியில் வந்த போது, நெல்லிக்குப்பத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த லாரி, இவரது பைக் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில், பரத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின் னால் அமர்ந்து வந்த சுவேதா, பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். உடனே, அங்கிருந்தோர் சுவேதாவை மீட்டு, அம்மாபேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காயார் போலீசார், மேற்கண்ட இருவரது உடலையும், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement