ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வனத்துறை வாகன கட்டணம் ரூ.80 35 கி.மீ., துாரம் பஸ் வசதி ஏற்படுத்தாமல் மலைவாழ் மக்களை தண்டிக்கும் அரசு
தேன்கனிக்கோட்டை: ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல, வனத்துறை வாகனத்தில், 80 ரூபாய் கட்டணம் கொடுக்க வேண்டிய நிலையில் மலைகிராம மக்கள் உள்ளனர். கொட்டகரையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்காமல், அரசு மக்களை தண்டித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து, 35 கி.மீ., துாரத்தில் கொடகரை மலை கிராமம் உள்ளது. இதை சுற்றி, கரிசித்தாபுரம், தொட்டியூர், குண்டுமார்த்த கொல்லை, புரவப்பன் கொல்லை உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
அதேபோல், தேன்கனிக்கோட்டையிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் பெட்டமுகிலாளம் மலை கிராமம் உள்ளது. இதை சுற்றி, 41க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மொத்தம், 13,000க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
வனத்துறை வாகனம்
தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் வரை, அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அங்கிருந்து, 16 கி.மீ., தொலைவிலுள்ள கொடகரை மலை கிராமத்திற்கு சாலை வசதி இருந்தும், அரசு பஸ் வசதி இல்லை. அதனால், வனத்துறை மூலம் இயக்கப்படும் வாகனத்தில், கொடகரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் பயணிக்கின்றனர். கொடகரையிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்ல, 35 கி.மீ., துாரத்திற்கு வனத்துறை வாகனத்தில் ஒரு நபருக்கு, 80 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வனத்துறை வாகனம் இயக்கப்படுகிறது. அவசர மருத்துவ தேவைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்றால் ஒரு நபர், 160 ரூபாய் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். அன்றாட கூலி வேலை செய்யும் மக்களுக்கு, இத்தொகை மிகவும் அதிகமாகும். இதை அறிந்த அரசும், அரசு பஸ் வசதி செய்து தரவில்லை.
மக்கள் சிரமம்
மேலும், பெட்டமுகிலாளம், கொடகரையை சுற்றி, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருந்த போதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட அரசால் ஏற்படுத்தப்படவில்லை.
பெட்டமுகிலாளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், 20 கி.மீ., வரை பயணித்தும், கொடகரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், 25 கி.மீ., துாரம் பயணித்தும், உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
இங்கு ஒரு மாதத்திற்கு, 13 முதல், 15 பிரசவம் நடக்கிறது. அதில் பெரும்பாலான கர்ப்பிணிகள், பெட்டமுகிலாளம், கொடகரை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள்.
வீடுகளில் பிரசவம்
மலை கிராம மக்கள் நீண்ட துாரம் பயணித்து, உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டியுள்ளதால், பல பெண்கள் வீடுகளிலேயே குழந்தை பெற்று கொள்வது நடக்கிறது. யானைகள் நடமாடும் இப்பகுதிகளில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து, நோயாளிகளை ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு செல்லவே கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பெட்டமுகிலாளம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, அரசிற்கு கடந்த சில ஆண்டுக்கு முன் பரிந்துரை அனுப்பப்பட்டது. ஆனால், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், 13,000 மக்களின் நிலை மோசமாகி உள்ளது.
பாரபட்சம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, 30,000 மக்கள் தொகை உள்ள இடத்தில் அமைக்கலாம். மலைப்பகுதிக்கு விதிவிலக்கு உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10,000க்கும் குறைவான மக்கள் தொகை உள்ள ஆம்பள்ளியிலும், திருப்பத்துார் மாவட்டம், ஜமுனாமுத்துாரில், 3,500 மக்கள் தொகை உள்ள பகுதிக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு வழங்கியுள்ளது. ஆனால், பெட்டமுகிலாளம் கொடகரை மக்களுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வழங்காமல், அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
மேலும்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்
-
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை
-
அனைத்து ஒப்பந்தங்களுக்கு தெளிவான மனநிலையுடன் பேச்சு; மத்திய அரசு
-
பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்
-
100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்: ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து!