பாகுபாடின்றி தேர்பவனி நடத்த வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் மேலுாரில் கோயில் திருவிழாவின்போது குறிப்பிட்ட 2 தெருக்களை புறக்கணிக்காமல் பாகுபாடின்றி தேர் பவனி நடத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஸ்ரீரங்கம் மேலுார் சத்யராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: மேலுாரில் அறநிலையத்துறையின் கீழ் காடைப்பிள்ளை அய்யனார் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மாசியில் திருவிழா நடைபெறும். கோயில் கருவறையிலுள்ள சுவாமி சிலையுடன் தேர் எங்களின் குறிப்பிட்ட 2 தெருக்களை தவிர, கிராமத்தின் பிற தெருக்கள் வழியாக சென்று வருகிறது. எங்களின் தெரு முனையில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு, வழிபட அனுமதிக்கப்படுகிறது.

இதில் பாகுபாடு நிலவுகிறது. முடி திருத்தம் செய்யும் கடைகளில் எங்கள் பகுதி மக்களுக்கு முடி திருத்தம் செய்வதில்லை. சில டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை நடைமுறையில் உள்ளது. பாகுபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழா பிப்.15 முதல் பிப்.18 வரை நடைபெறும். அப்போது எங்கள் தெருக்கள் வழியாக தேர் பவனி நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.

பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சிவபாலன் ஆஜரானார். நீதிபதிகள் அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement