பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்
குன்றத்துார்: பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்தில், குன்றத்துார் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.
குன்றத்துார் அருகே பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய், 22. இவர், தாம்பரம் அருகே சி.என்.சி., மிஷின் ஆப்ரேட்டர் பயிற்சி பெற்று வந்தார். நேற்று காலை, வீட்டில் இருந்து கே.டி.எம்.டியூக் பைக்கில் தாம்பரம் நோக்கி சென்றார்.
தாம்பரம் - சோமங்கலம் சாலையில், எருமையூர் பகுதி வளைவில், இவரது பைக்கும் தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தாம்பரத்தைச் சேர்ந்த விஷ்ணு, 23, சஞ்சய், 23, ஆகியோரது 'ஹோண்டா ஷைன்' பைக்கும் நேருக்கு நேர் மோதியது. அப்பகுதியினர் மூவரை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, அஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.