இந்திய ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது: அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

1

நியூயார்க்: இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்கது என்றும், இது இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய பேச்சு, சமீபத்தில் இடைக்கால ஒப்பந்தமாக எட்டப்பட்டது.


தொழில்துறை பொருட்கள், உணவு பொருட்கள், விவசாய பொருட்களுக்கான வரி குறைப்பு, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எரிசக்தி பொருட்கள், நிலக்கரி, விமானங்கள் வாங்கும் திட்டங்கள் போன்ற பல அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.


மேலும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை, 50ல் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார்.


இந்நிலையில், வாஷிங்டனில் 'சாம்பியன் ஆப் கோல்' என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்கது என்றார்.


நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''அமெரிக்கா இப்போது உலகின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. ''கடந்த சில மாதங்களில் மட்டும் ஜப்பான், கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளோம். ''இதன்மூலம் அமெரிக்காவின் நிலக்கரி ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும். உலகில் எங்கும் இல்லாத சிறந்த தரமான நிலக்கரியை நாங்கள் வழங்குவோம்,'' என்றார்.

Advertisement