எந்த மாநிலங்களுக்கும் நிதி குறைக்கப்படவில்லை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

9


புதுடில்லி: '' எந்த மாநிலத்துக்கும் அல்லது திட்டத்துக்கும் நிதி நிறுத்தப்படவோ, குறைக்கப்படவோ இல்லை,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி, சாலை வரி, மற்ற வருமானங்களில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிதி எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில் அதன் குறைபாடுகளுக்கு மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.


நிதியை குறைத்து விட்டோம் என சொல்வது தவறு. கடந்த காலத்தில் கஜானாவில் இருந்து எவ்வளவு பணம் வெளியேறியது என்பதை அடிப்படையாக வைத்து வெற்றி கணக்கிடப்பட்டது. அது உண்மையில் செலவிடப்படுகிறதா அல்லது இல்லையா என்பது உறுதி செய்யப்படவில்லை. இது வங்கி அமைப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது அரசின் செலவு செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை உள்ளது. செலவினங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அதிக பணத்தை வெளியிடுவது இல்லை. தேவைப்படும்போது மட்டுமே வெளியிடுகிறோம்.


எந்த மாநிலத்துக்கும் அல்லது திட்டத்துக்கும் நிதி மறுக்கப்படுவதோ நிறுத்தப்படுவதோ இல்லை. இது நிதியை குறைத்தல் என அழைக்க முடியாது. வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதற்கான உத்தரவாதம் ஆகும். மத்திய அரசின் நிதி என்பது எப்போதும் பயன்படுத்தக்கூடிய இலவச தொகுப்பு அல்ல. இது ஒவ்வொரு இந்தியரின் கடின உழைப்பால் சம்பாதித்த பங்களிப்பு ஆகும். தனிநபர்கள் அதிகம் பேர் வருமான வரி செலுத்துவது என்பது நடுத்தர மக்கள் மீதான அடக்குமுறை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement