கர்நாடக பக்தர் ஆட்டோவில் தவற விட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கர்நாடக பக்தர் ஆட்டோவில் விட்டுச் சென்ற ரூ. 2 லட்சத்தை போலீசார் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் நேர்மையை பலரும் பாராட்டினர்.
கர்நாடகா பெங்களூருவை சேர்ந்தவர் காந்தி 55. குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆட்டோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் தங்கி இருந்த விடுதிக்கு சென்றார். அப்போது ஆட்டோ பின் பகுதியில் வைத்த பேக்கை எடுக்காமல் சென்று விட்டார்.
ராமேஸ்வரம் அப்துல் கலாம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளீஸ்வரன், பேக்கை கவனிக்காமல் மற்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனுஷ்கோடி சென்று திரும்பினார். அப்போது பேக் இருப்பதை கண்ட டிரைவர் காளீஸ்வரன், அதனை டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கர்நாடக பக்தரிடம் பேக்கை போலீசார் ஒப் படைத்தனர்.
பேக்கில் ரூ. 2 லட்சம், ஏ.டி.எம்., கார்டுகள் இருந்ததை கண்டு கர்நாடகா பக்தர் மகிழ்ச்சி அடைந்தார். இந்த பேக்கை நேர்மையுடன் ஒப்படைத்த டிரைவர் காளீஸ்வரனை போலீசார், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.