கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது கார் 2 பெண்கள் பலி; டிரைவர், 2 சிறார்கள் படுகாயம்
புதுடில்லி : டில்லி அருகே சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் கார் மீது பின்புறமாக மோதிய காரில் இருந்த பெண்கள் இருவர் இறந்தனர். காரை ஓட்டியவர் மற்றும் இரு சிறார்கள் படுகாயம் அடைந்தனர்.
கிழக்கு டில்லியின் காசிபூர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை - 9ல், என்.சி.டி., சுங்கச்சாவடி உள்ளது. அதன் அருகே உள்ள வினோத்நகர் அருகே நேற்று அதிகாலை, 6:45 மணிக்கு, 'கியா செல்டாஸ்' கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அந்த சொகுசு காரின் ஓட்டுநர் தீபன்சு கார்க், இரு பெண்கள் மற்றும் இரண்டு சிறார்கள் இருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, திடீரென நின்றதை அறியாமல், வேகமாக சென்ற கியா செல்டாஸ் கார், அந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.
இதில், தீபாஞ்சலி, 38, நீலம் கார்க், 55, ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார் மோதியதில், 3 மற்றும் 5 வயது சிறார்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுடன், அந்த காரை ஓட்டி வந்த தீபன்சு கார்க் என்பவரும் மயங்கிய நிலையில், அருகில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த அந்த மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி, அந்த இடத்திலிருந்து சென்று விட்டது. அதை கண்டறியும் பணியில் காசிபூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.