பெரியகயப்பாக்கத்தில் சமூக நலக்கூடம் இல்லாததால் கிராம மக்கள் சிரமம்

சித்தாமூர்:பெரியகயப்பாக்கம் பகுதியில் சமூக நலக்கூடம் இல்லாததால், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பெரியகயப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் சின்னகயப்பாக்கம், தோட்டிக்குப்பம், புத்துார், மதுராபுதுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் சமூக நலக்கூடம் இல்லாததால், மக்கள் தங்களது குடும்ப சுப நிகழ்ச்சிகளை சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.

தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 30,000 முதல், 60,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அத்துடன், போக்குவரத்துக்கும் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால் தவிக்கின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரியகயப்பாக்கம் பகுதியில் சமூக நலக்கூடம் அமைத்து, அதன் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement