கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது ரவுடி கொலை வழக்கில் அதிரடி
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 47, கடந்த ஆண்டு ஜூலை 15ல், நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார்.
அவரது தாய் அளித்த புகாரில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது ஆதரவாளர்கள் ஜெகதீஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கின் முதல் குற்றவாளியாக ஜெகதீஷ், ஐந்தாவது குற்றவாளியாக பைரதி பசவராஜ் சேர்க்கப்பட்டனர். வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது. ஜெகதீஷை போலீசார் கைது செய்தனர்.
பாரதிநகர் போலீஸ் நிலையத்தில், பைரதி பசவராஜ் இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரானார். 'கொலைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜெகதீஷ் யார் என்றே தெரியாது' என்று கூறினார்.
ஆனால், இருவரும் உத்தர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு சென்ற புகைப்படங்கள், 'மொபைல் போன்' அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். பைரதி பசவராஜை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இதனால், தலைமறைவான பைரதி பசவராஜ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பதுங்கியிருந்த பைரதி பசவராஜ் நேற்று இரவு விமானத்தில் பெங்களூரு வந்தார். அங்கு காத்திருந்த சி.ஐ.டி., அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.