கும்மிடியில் ரயில் மறியல் போராட்டம்: 150 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொழில் மற்றும் விவசாய சங்கத்தினர் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி சென்றனர். பின் தடைகளை மீறி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் நோக்கி சென்ற ரயிலை மறித்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் வி.சி., திருவள்ளூர் மண்டல செயலர் தளபதி சுந்தர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, 90 பேரை கைது செய்தனர்.

பெரியபாளையம் பஜார் பேருந்து நிலையம் அருகே, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உள்ளிட்ட பிற அமைப்புகள் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் குறித்த நான்கு புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், விவசாய விரோத சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் ஆகியவற்றை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட செயலர் நாகஜோதி உட்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement