வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த கிரஷர் ஊழியர்கள்; விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இண்டூர் மற்றும் நாகர்கூடல் பஞ்., எல்லையிலுள்ள அவ்வை நகரில், தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் செயல்படுகிறது. வனத்துறை இடத்தை குவாரி உரிமையாளர்கள் கடந்த, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்த புகாரால், அவர்களுக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர்கள் அந்த இடத்தை தொடர்ந்து, பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் அந்த இடத்தில் பொக்லைன் மூலம் வனத்துறையினர் பள்ளம் தோண்டினர். ஆனால், நேற்று காலை கிரஷர் உரிமையாளர்கள் பள்ளத்தை மூடி விட்டு மீண்டும், அந்த இடத்தை பயன்படுத்த தொடங்கினர். இது குறித்து வனக்காப்பாளர் முருகன் கேட்டபோது, குவாரி நிர்வாகம் தரப்பில், அவருக்கும் வனத்துறை அலுவலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று மதியம், 3:00 மணிக்கு, தர்மபுரி வனச்சரக அலுவலர் முரளி தலைமையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, கிரஷர் மேலாளர் உள்ளிட்ட, 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து, நாகர்கூடல் பஞ்., முன்னாள் தலைவர் குமார் கூறியதாவது: நாகர்கூடல் மற்றும் இண்டூர் பஞ்.,ல், அனுமதித்த அளவை விட கற்களை வெட்டி எடுக்கின்றனர். விவசாய நிலம் பாதிப்பதால், புகார் அளித்தாலும், போராட்டம் நடத்தினாலும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. கடந்த, 2024ல் நாகர்கூடல் பஞ்., மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், வெடி மருந்து குடோனுக்கு சாலை அமைத்து பயன்படுத்தினர். இது குறித்து பஞ்., நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதை அதிகாரிகள், அதை கண்டு கொள்ளாமல், மீண்டும் அந்த வெடி மருந்து குடோனுக்கு சாலை அமைக்க அனுமதி அளித்தனர். இதுபோன்ற செயலால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கில் தடையாணை எதுவும் வழங்கவில்லை. இதனால் நிலத்தை பயன்படுத்துவதை தடுக்க, வனத்துறையினர் பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டினர். அப்போது குவாரி நிர்வாகத்தினர், வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், ஏன் நாங்கள் செல்லும் வழிப்பாதையில் குழி தோண்டுகிறீர்கள் எனக் கேட்டனர். அவர்கள் கொலை மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement