ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை... இஸ்ரேலுக்கு தீராத சந்தேகம்

2


வாஷிங்டன்: ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேற்காசிய நாடுகளான ஈரான், இஸ்ரேல் இடையே அணுசக்தி பயன்பாடு தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. அதேபோல, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் மோதல் உள்ளது. கடந்தாண்டு இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கின. மேலும், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு போர் கப்பல்கள், ஏவுகணைகளை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அனுப்பியது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே, அணு ஆயுத திட்டங்கள், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கான ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்தார்.

இதற்காக அவர் வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு, இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக, அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புவதாக கூறினார்.

இது குறித்து அவர் பேசியதாவது; அமெரிக்காவின் பலத்தை அறிந்து ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் கருதுகிறார். கடந்த முறை ஒப்பந்தம் செய்யாதது தவறு என்பதை உணர்ந்த ஈரான், இப்போது ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவர் நினைக்கிறார். ஈரானுடனான ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த ஒப்பந்தமும் வெறும் அணுசக்தி விவகாரத்தோடு நின்றுவிடக்கூடாது. அதில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஆகியவையும் அடங்கியிருக்க வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisement