நிறைவு பெற்றது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு

1

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் (பிப்ரவரி 13) நிறைவு அடைந்தது. பார்லிமென்டின் இரு அவைகளும் மார்ச் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. முதல்நாளில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை முடங்கி வருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுலை, எம்.பி., பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான நோட்டீசை, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே வழங்கி உள்ளார்.



இந்த சூழலில் இன்று காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று 2026 ஜனவரியில் இறந்த எம்.பி பகவான் தாஸ் ரத்தோரை நினைவுக் கூரும் வகையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.


இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை 12 மணிக்கு கூடிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி தொடர்ந்ததால், மார்ச் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


அதேநேரத்தில் காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடி நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களில் எம்பிக்கள் விவாதங்களை முன்வைத்தனர். இன்றுடன் முதல் அமர்வு ராஜ்யசபாவிலும் நிறைவு பெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவு அடைந்தது.

Advertisement