2 ஆண்டுகளில் 532 என்கவுன்டர்... நக்சல்கள் 2700 பேர் சரண்

ராய்ப்பூர்: கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 532 நக்சலைட்டுகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். 2,700 பேர் சரணடைந்திருக்கின்றனர் என்று சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சத்தீஸ்கரில் 532 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 2004 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 2,700 பேர் சரணடைந்துள்ளனர். வரும் மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஏகே 47, இன்சாஸ், எல்எம்ஜி, மோர்டார் மற்றும் பிஸ்டல்கள் உள்ளிட்ட சுமார் 1,100 ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட, சரணடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது திருப்தி அளிக்கிறது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக, 7 மையங்கள் செயல்படுகின்றன. இதுவரையில், 410 பெண்கள் உட்பட சுமார் 1,700 முன்னாள் நக்சலைட்டுகள் பல்வேறு தொழில் திறன்களில் பயிற்சி பெற்றுள்ளனர். சரணடைந்தவர்களுக்கு செல்போனுடன் கூடிய வரவேற்பு கிட்கள், ஆதார், ரேஷன் மற்றும் ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல, 2001ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையில் 38 மதமாற்ற வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், 2024 மற்றும் 2025 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 67 வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 34 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement