ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்கள் ரத்து காங்., குறித்த சர்ச்சை பேச்சு காரணமா?
திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் மாநில அளவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்வேறு ஊர்களில் பங்கேற்று வருகிறார்.
திருநெல்வேலி தச்சநல்லுாரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தொண்டர்கள் திரட்டப்பட்டிருந்தனர்.
கூட்டத்திறக்க திருநெல்வேலி வந்த அமைச்சர், மாவட்டக் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர், அவசர காரணத்தால் மதுரை திரும்ப வேண்டியிருப்பதாக கூறி, தச்சநல்லுார், வீரவநல்லுாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களை ரத்து செய்யுமாறு கட்சியினருக்கு தெரிவித்து விட்டு புறப்பட்டார்.
நாளை (பிப்.,15) மதுரையில் நடைபெறும் தென் மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட வேண்டியிருப்பதால் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், சமீப காலமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுக்கூட்டங்களில், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக, தி.மு.க., வட்டாரங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக, “தி.மு.க.வுடன் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன; அதை முதல்வர் பார்த்துக் கொள்வார். கூடவே இருந்து கொண்டு காங்கிரசார் உயிரை வாங்குகின்றனர்” என்று, காங்கிரஸ் குறித்து கிண்டலும் கேலியுமாக தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
த.ம.மு.க., கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் தி.மு.க.-வில் ஒரு சீட் கேட்டது, ஸ்ரீவில்லிபுத்துார் வழங்க முன் வந்த போது அவர் சங்கரன்கோவில் வேண்டும் என கேட்டது உள்ளிட்ட, பல்வேறு ரகசிய விபரங்களையும் பொதுமேடையில் வெளிப்படையாக பேசினார். ஜான் பாண்டியன் நீண்ட காலமாக தே.ஜ., கூட்டணியில் உள்ளவர் என்பதால், இந்தப் பேச்சு, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கூட்டணி கட்சிகள் குறித்து ராஜகண்ணப்பன் தொடர்ந்து பேசும் சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பதற்காகவே, அவரது பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
மீண்டும் மன்னராட்சி வேண்டும்; நேபாள மக்கள் கோஷம்
-
ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது; ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
-
ராஜஸ்தானில் கார் - டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
-
கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டிலா? திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம்