சென்னையை மகிழ்விக்கும் சித்திரக்கதை நாயகர்கள்


சென்னையை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள 'காமிக் கான்' சித்திரக்கதை திருவிழா, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆங்கிலத்தில் 'காமிக்' என்று அழைக்கப்படும் கலை வடிவத்திற்குத் தமிழில் 'சித்திரக்கதை' என்று பெயர். கதையை வெறும் எழுத்துக்களாகப் படிக்காமல், கண்ணைக் கவரும் ஓவியங்கள் மற்றும் உரையாடல் துணுக்குகள் வழியாக ரசிக்க வைப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
Latest Tamil News
இதற்குச் சிறந்த உதாரணமாக, பல தலைமுறை வாசகர்களுக்குப் பரிச்சயமான 'இரும்புக் கை மாயாவி' கதாபாத்திரத்தைக் கூறலாம். ஆய்வக விபத்தில் தனது வலது கையை இழந்த லூயிஸ் கிராண்ட், அதற்குப் பதிலாகச் செயற்கையான இரும்புக்கையைப் பொருத்தியிருப்பார். அவர் உடலில் மின்சாரம் பாயும் தருணங்களில், உடல் மறைந்து அந்த இரும்புக்கை மட்டும் காற்றில் மிதப்பது போலத் தெரிவதே அவரது தனித்துவமான சக்தியாகும்.
Latest Tamil News
இத்தகைய கற்பனைத் திறன் மிக்க கதாபாத்திரங்கள் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளன. மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸின் ஸ்பைடர்-மேன், அயர்ன் மேன், பேட்மேன், கேப்டன் அமெரிக்கா மற்றும் ஹல்க் போன்ற பாத்திரங்கள் உலகளாவிய ரசிகர்களைக் கொண்டுள்ளன. அதேபோல், ஜப்பான் நாட்டின் 'நருடோ', 'கோகு' மற்றும் 'ஒன் பீஸ்' போன்ற அனிமே கதாபாத்திரங்களுக்கு இன்றைய இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சக்திமான், டிங்கிள் காமிக்ஸின் சப்பாது மற்றும் ஷிகாரி ஷாம்பு போன்ற பாத்திரங்கள் இன்றும் நம்மிடையே பிரபலமாகத் திகழ்கின்றன.
Latest Tamil News
இத்தகைய கற்பனை பாத்திரங்களை உருவாக்கிய கலைஞர்களும், அந்தப் பாத்திரங்களை நேசிக்கும் ரசிகர்களும் ஒன்றாகக் கூடும் ஒரு சங்கமமே இந்த 'காமிக் கான்' விழா. இந்த விழாவின் சிறப்பம்சமே, பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சித்திரக்கதை நாயகர்களைப் போலவே உடை அணிந்து (காஸ்ப்ளே) வருவதாகும். நேற்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில், ஏராளமான குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கூட ஆர்வத்துடன் விதவிதமான கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்து விழாவைக் களைகட்டச் செய்தனர். இது முழுக்க முழுக்க மனிதனின் கற்பனைத் திறனையும் கலை ஆர்வத்தையும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக அமைந்தது.
Latest Tamil News
நேற்றைய நிகழ்வில், 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட புகழ்பெற்ற சர்வதேச காமிக் எழுத்தாளர் ரான் மார்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 'சில்வர் சர்ஃபர்' கதைகளை எழுதியவரும், 'கிரீன் லாண்டர்ன் கைல் ரெய்னர்' கதாபாத்திரத்தை உருவாக்கியவருமான இவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது. அவருடன் இணைந்து 16 சிறந்த இந்தியக் கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மேலும், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேகரிப்புப் பொருட்களை வாங்கவும், பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடவும் பிரத்யேக இடங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News
கற்பனை உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்த பிரம்மாண்ட நிகழ்வைத் தவறவிட்டவர்கள் இன்றும் கலந்துகொள்ளலாம். இன்று காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவிற்கு நுழைவுக் கட்டணம் உண்டு.

படங்கள்:காளீஸ்வரன்

Advertisement