புதிய பிரதமர் அலுவலகத்தில் வேலை; வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளம்: மத்திய அமைச்சர் பெருமிதம்


புதுடில்லி:
பிப்ரவரி 16, 2026 இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தைக் குறிக்கிறது. புதிய பிரதமர் அலுவலகத்தில் முதல் முழு வேலை நாள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 1900ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அவர்களது தலைமை செயலகம், டில்லியில் ரெய்சினா ஹில் பகுதியில் சவுத் பிளாக்கில் செயல்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இங்கு தான், பி.எம்.ஓ., எனப்படும் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது மிகவும் பழமை வாய்ந்த இந்த கட்டடங்களில் இருந்து, புதிய கட்டடத்துக்கு பிரதமர் அலுவலகம் மாறியது.

'கர்த்தவ்ய பாத்' எனப்படும் கடமை பாதையில் கட்டப்பட்டுள்ள புதிய பிரதமர் அலுவலகமான, 'சேவா தீர்த்' கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஆகிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டில்லியின், 'சென்ட்ரல் விஸ்டா' பகுதி மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய பிரதமர் அலுவலகத்தின் முழு வேலை நாள் இன்று முதல் தொடங்கியது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 16, 2026 இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தைக் குறிக்கிறது. புதிய பிரதமர் அலுவலகத்தில் முதல் முழு வேலை நாள். காலனித்துவ ஆட்சியின் அடையாளத்தை விட்டு, புதிய அலுவலகம் சேவா தீர்த்தத்திற்கு இந்த மாற்றம், பிரதமர் மோடியின் உறுதியான நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் மட்டுமே சாத்தியமானது. 100 ஆண்டுகள் பழமையான சவுத் பிளாக்கில் இருந்து கடைசியாகப் பணியாற்றியவர்களில் ஒருவராகவும், அதே நேரத்தில், புதிய சேவா தீர்த் கட்டடத்தில் இருந்து பணியாற்றிய முதல் நபராகவும் இருப்பது பெரிய அதிர்ஷ்டம். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

Advertisement