ஹரியானாவில் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்: மக்கள் அச்சம்

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளது மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


ஹரியானாவின் பல்வல் மாவட்டத்தில் உள்ள சயின்சா கிராமத்தில் தான் கடந்த மாதம் கடைசி வாரத்தில் அங்கு வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள வீடுகளில் குறைந்தது ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி, உடல்வலி ஆகியவை ஏற்பட்டன. முதலில் அவை பருவகால நோய் என நினைத்து அசால்ட்டாக இருந்துள்ளனர். ஆனால், நாளுக்கு நாள் உடல்நிலை மோசம் அடையவே அவர்கள் மருத்துவமனைகளை நாடினர். இதனால், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.


கடந்த 15 நாட்களில் மட்டும் 5 குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்துள்ள சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர்களில் சிலருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


அக்கிராமத்தில் 107 இடங்களில் தண்ணீரை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், 23 இடங்களில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானதாக இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இக்கிராமத்தில் வசிக்கும் பலர் நிலத்தடி நீர் அல்லது டாங்கர் வாகனங்களில் வரும் தண்ணீரை நம்பி உள்ளதால், தண்ணீர் மூலம் நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பலர் ஹெபாடிடிஸ் பி பாதிப்பு இருந்தது உறுதி ஆகி உள்ளதாக தெரிவித்தனர்.


இதனிடையே, 12 பேர் உயிரிழப்புக்கு மாந்ரீகமே காரணம் என மக்கள் இடையே சிலர் பீதியை கிளப்பி உள்ளனர்.

Advertisement