ஏஐ தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் பேச்சு; டில்லி உச்சி மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து 30 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மிக விரைவில் அரசு 'கிரியேட் இன் இந்தியா' திட்டத்தை தொடங்கும், இது ஒரு தொழில், வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் சார்ந்த பணியாக இருக்கும்.
ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக, சட்ட தீர்வுகள் குறித்து 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தவறான தகவல்கள், போலி செய்திகள் சமூகத்தின் அடித்தளத்தைத் தாக்குகின்றன. இந்த தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வது சமூக
வலைதள நிறுவனங்கள், ஏஐ தொழில்நுட்ப படைப்பாளர்களின் பொறுப்பாகும். புதிய தொழில்நுட்பம் நம்பிக்கையை பலப்படுத்துவதை உறுதி செய்வதில் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
பேச்சு சுதந்திரம் என்பது நம்பிக்கையைச் சார்ந்தது, அந்த நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.
ஏஐ உச்சிமாநாட்டின் அடுத்த சில நாட்களில், சமூகத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை நாங்கள் ஆராய உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீங்குகளைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் நன்மைகளைப் பெறுவது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
இந்த உச்சிமாநாட்டிலிருந்து ஒரு நல்ல முடிவை நாங்கள் எடுப்போம். நம் நாட்டில் மிகப்பெரிய படைப்பாற்றல் பன்முகத்தன்மை உள்ளது. பல்வேறு மொழிகளில் மக்கள் உள்ளனர். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.