பெண் ஊழியர்களுக்கு அதிகாரி பாலியல் தொல்லை!
''ல ட்சக்கணக்கில் வசூல் நடந்திருக்கு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள்ல, 2003ம் வருஷம், 'கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்' பணியிடங்களை நிரப்பினாங்க... அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமா, தற்காலிக அடிப்படையில் தான், இந்த நியமனங்கள் நடந்துச்சு வே...
''தங்களை பணி நிரந்தரம் செய்யணும்னு, இவங்க, 20 வருஷங்களுக்கு மேலா கோரிக்கை வச்சிட்டு இருக்காங்க... சமீபத்தில் இவங்களிடம், 'பணி நிரந்தரம் பண்றோம்'னு சொல்லி, ஆளுங்கட்சியினர் லட்சக்கணக்கில் வசூல் நடத்தியிருக்காவ வே...
''போன அ.தி.மு.க., ஆட்சியிலும் இப்படி வசூல் நடந்தும், யாருக்கும் பணி நிரந்தரம் தரல... 'இப்பவும், அதே மாதிரி ஏமாத்திடுவாங்களோ'ன்னு பணம் குடுத்தவங்க பயந்து போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கீழ்நிலை அதிகாரிகளை பலிகடாவாக்கி, கதையை முடிச்சிட் டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை மாநகராட்சியின் அம்பத்துார் மண்டலத்துல, மத்திய அரசின் தேசிய பணியாளர் ஊரக நிர்வாக திட்டத்தின் கீழ், 1,500 துாய்மை பணியாளர்களை தேர்வு செஞ்சிருக்காங்க... அந்த, 1,500 பேர்ல பெரும்பாலானவங்களை, துாய்மை பணிக்கு அனுப்பாம, அலுவலகம் சார்ந்த பணிக்கு அனுப்பிட்டாங்க...
''இதனால, இவங்க பணிக்கு தாமதமா வர்றது, வந்துட்டு கையெழுத்து போட்டுட்டு கிளம்பிடுறது, மாநகராட்சி அதிகாரிகளின் வீட்டு வேலைகளை பார்க்கிறதுன்னு நிறைய முறைகேடுகள் நடக்குதுங்க...
''இது சம்பந்தமா, மாநகராட்சி கமிஷனரிடம், பா.ஜ.,வினர் புகார் குடுத்திருக்காங்க... இதனால, உஷாரான அம்பத்துார் மண்டல அதிகாரி, 'இந்த குளறுபடிக்கு மாநகராட்சியின் வருவாய் மற்றும் மின் துறையின் உதவி பொறியாளர்கள் சிலர் தான் காரணம்'னு சொல்லி, அவங்களை வேற மண்டலங்களுக்கு இடமாற்றம் செஞ்சுட்டு, தன் மீது விசாரணை வராம தப்பிச்சிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பிரபாகரன், தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''பெண் ஊழியர்களை தொல்லை பண்றார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையை ஒட்டி, பட்டு புடவைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் இருக்கோல்லியா... இந்த ஊரின் வட்டார போக்குவரத்து துறையில் ஒரு அதிகாரி இருக்கார் ஓய்...
''அடுத்த வருஷம், 'ரிட்டயர்' ஆக போறார்... இவர், தன் ஆபீஸ் பெண் ஊழியர்களிடம், 'டபுள் மீனிங்'ல பேசறார்... குறிப்பா, 'டைவர்ஸ்' வாங்கிய ஒரு பெண் மற்றும் கணவரை இழந்த பெண் ஊழியரிடம், அடிக்கடி ஏடாகூடமா பேசறதும் இல்லாம, 'எல்லாத்துக்கும் நான் இருக்கேன்'னு பொடி வச்சு பேசறாராம் ஓய்...
''அதுவும் இல்லாம, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அந்த பெண்களுக்கு சேலை வாங்கி குடுக்க முயற்சி பண்ணியிருக்கார்... அதை வாங்காம தவிர்க்க, பெண் ஊழியர்கள் ரொம்பவே சிரமப்பட்டிருக்காங்க... இவரால நொந்து போன பெண் ஊழியர்கள், இடமாறுதல் கிடைக்குமான்னு அழாத குறையா புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வாரும் நாகராஜன்... வேலை எல்லாம் எப்படி போகுது வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
மேலும்
-
பேரார் சாலையில் கூட்டமாக உலா வரும் காட்டெருமைகள்: 'செல்பி' மோகத்தில் சுற்றுலா பயணியர் தொல்லை
-
மனுதாரர்கள் தீக்குளிக்க முயற்சி வாரந்தோறும் போலீசார் 'அலர்ட்'
-
நேரு கம்பையை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் கலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு
-
ஊராட்சி துவக்க பள்ளியின் 55வது ஆண்டு விழா
-
நடப்பாண்டு கோடை விழாவுக்கு 10 லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு பணி துவக்கம்
-
மலை கோவில்களில் சிவன் ராத்திரி விழா கோலாகலம்