விளையாட்டுக்கு ஒட்டிய வாகனம்... வினையானது ஒரு உயிர்!

2

வறுமை சூழ்ந்த அந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி நின்ற 23 வயது இளைஞன், ஒரு சிறுவனின் கார் ஓட்டும் ஆசைக்குப் பலியாகியிருக்கிறான். அந்த இளைஞனை இழந்த தாயின் அழுகை சத்தம், டெல்லியின் துவாரகா வீதிகளில் கதறலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில், டெல்லி துவாரகாவில் சொகுசு எஸ்.யூ.வி கார் ஒன்று அதிவேகத்துடன் தாறுமாறாக ஓடி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில், சாலையோரம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சாஹில் தனேஸ்ரா என்ற இளைஞன் மீது மோதி அவரைத் தூக்கி வீசுகிறது.

எலும்புகள் நொறுங்க, ரத்த சகதியாக அந்த இளைஞன் விழுந்த வேகத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது, அவர் இறந்துவிட்டார் என்பது. "அம்மா" என்று அலறக்கூட நேரம் கொடுக்காத கொடுமையான சாவு அது. ஆனால், அவரது தாய் இன்னா அப்போது தொடங்கிய அழுகையை இன்னும் நிறுத்தவில்லை.
Latest Tamil News
"எங்கள் சந்தோஷத்திற்காகத் தன் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவித்திராத என் மகன், சாகிற வயதா இது?" என்று இறந்துபோன மகனின் புகைப்படத்தைக் கட்டிக்கொண்டு அவர் கதறும் காட்சி, பலரது மனதையும் உலுக்கி வருகிறது.

இதை ஒரு சாதாரண விபத்து என்று மட்டும் கடந்து போய்விட முடியாது. காரணம், விபத்தை ஏற்படுத்தியது கார் ஓட்டும் வயதைத் தொட்டிராத, ஓட்டுநர் உரிமம் பெறாத 15 வயது சிறுவன்.

காரை ஓட்டி வந்த சிறுவனின் விவரம் சட்டப் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை என்றாலும், அந்தக் காரின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதில் காரை ஓட்டும் சிறுவன், "இப்போது நூறில் (100 கி.மீ வேகம்) போகிறேன், இன்னும் போகட்டுமா... போகட்டுமா?" என்று கேட்கிறான். கூட இருந்த சக நண்பர்களும் "போ... போ..." என்று ஜாலியாகக் கத்துகின்றனர்.

ஆகவே, இது சிறுவர்கள் கையில் காரைக் கொடுத்துப் பெற்றோர்கள் செய்த கொலை என்றே கருத வேண்டியுள்ளது.

காரை ஓட்டி வந்த சிறுவனும் அவனது நண்பர்களும் தற்போது விசாரணையில் உள்ளனர். சிறுவனிடம் காரைக் கொடுத்த குற்றத்திற்காகப் பெற்றோருக்கு அபராதம் மற்றும் கட்டாயச் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை வழங்கச் சட்டம் தயாராகி வருகிறது.

"எல்லாம் சரி... எனக்கு என்ன பதில்? எங்கள் குடும்பத்தின் ஒற்றை ஊன்றுகோலை இழந்து தவிக்கிறோம். நீங்கள் எதைக் கொடுத்தாலும் அது என் மகனின் உயிருக்கு ஈடாகாது. எனக்கு ஏற்பட்ட இந்த மரண வலி, இனி இன்னொரு தாய்க்கு ஏற்பட்டுவிடக் கூடாது" என்று கதறல்களுக்கு இடையே தாய் இன்னா வேண்டுகோள் வைக்கிறார்.

அது உண்மையும்கூட. உங்கள் செல்ல மகனிடம் அவனுக்கான ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் வாகனத்தை ஓட்டக் கொடுப்பது வெறும் சாவி அல்ல; அது இன்னொருவரின் சாவிற்கான அழைப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

-எல்.முருகராஜ்.

Advertisement