42 தமிழக கட்சிகள் நீக்கம்; தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

7

சென்னை: ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்த கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என கூறி, நாடு முழுதும் 474 கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தல் கமிஷன், கடந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில், 42 தமிழக கட்சிகளும் அடங்கும்.

இதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:





முறைகேடாக, மோசடியாக கட்சியை பதிவு செய்து இருந்தாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தாலோ, பட்டியலில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளது.

ஆனால், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தின்படி நீக்க முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை.

தேர்தல் கமிஷன் தரப்பில் முன்வைத்த வாதம்:





தேர்தல் கமிஷன், ஒரு உயர் அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பு. கட்சிகளை நீக்க அதிகாரம் இல்லை என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. தேர்தலில் போட்டியிடாமல், தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் என, எந்த கட்சியும் உரிமையாக கேட்க முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளதால், பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என, கூறவும் முடியாது.

நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:





தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்பதால், இடைக்கால தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இறுதி விசாரணை, மார்ச் 2வது வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement