சைதை துரைசாமியின் புகார்கள் கற்பனையானவை: உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வாதம்

4

- டில்லி சிறப்பு நிருபர் -

'கொளத்துார் தேர்தல் வழக்கில், மனுதாரர் சைதை துரைசாமியின் புகார்கள் அனைத்தும் கற்பனையானவை; ஆதாரமற்றவை' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கடந்த 2011 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.



இன்றைய விசாரணையில், முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள்:
பணம் கொடுத்ததாகக் கூறப்படும் ஈஸ்வரி மருத்துவமனை எங்குள்ளது என்றே அ.தி.மு.க.,வின் முக்கிய சாட்சியான மகாலிங்கத்திற்கு தெரியவில்லை. அவர், மொபைல் போன் மூலம் துரைசாமிக்கு தகவல் கொடுத்ததாகக் கூறுகிறார். அதே நேரத்தில், துரைசாமியின் மொபைல் போன் எண் தெரியாது என்கிறார். இதுவே, அந்த சாட்சி பொய்யானது என்பதை நிரூபிக்கிறது.


ஈஸ்வரி மருத்துவமனையில் பெண்கள் கையில் பணம் வைத்திருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கூட சாட்சியாக முன்னிறுத்தவில்லை. மனுதாரர் சமர்ப்பித்த வீடியோ ஆதாரம் முழுமையானது அல்ல. அது ஒரு சிறிய பகுதி மட்டுமே. அந்த வீடியோவை எடுத்த செய்தியாளரை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? பிரசாரத்தின் போது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக, ஸ்டாலின் மனைவி துர்கா கூறியது தேர்தல் விதிமீறல் ஆகாது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.



ஏற்கனவே, ஒரு நாள் முழுதும் சைதை துரைசாமி தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில், இன்னும், ஸ்டாலின் தரப்புக்கு, 30 நிமிடமும், சைதை துரைசாமி தரப்புக்கு, ஒரு மணி நேரம் மட்டுமே வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதன்பின், தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

Advertisement