விழுப்புரத்தில் தேர்தல் முன் விரோதத்தில் கொலை: 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஐகோர்ட்

சென்னை; விழுப்புரம் அருகே முன் விரோதத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், 21 பேரை விடுதலை செய்து, திண்டிவனம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், 21 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் வில்வமணி. இவரிடம், காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும் இடையே, பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

வில்வமணியுடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை, 2013ம் ஆண்டு மே 29ல் பாஸ்கர் நடத்தினார். மறுநாள் அதிகாலை விழா முடிந்து, தன் மனைவி அமுதாவுடன் சென்ற பாஸ்கரை, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இது தொடர்பாக, கிளியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணவேணி, அவரது மகன்கள் மதன்ராஜ், மதன்குமார் உட்பட, 23 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திண்டிவனம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட இருவர் இறந்து விட்டனர். மீதமுள்ள 21 பேரை விடுதலை செய்து, 2017ம் ஆண்டு ஏப்., 28ல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பாஸ்கர் மனைவி அமுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் விசாரித்தனர்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றம், நம்பகமான ஆதாரங்களை முற்றிலும் நிராகரித்துள்ளது. சிறிய, அற்பமான முரண்பாடுகளுக்கு, தேவையற்ற முக்கியத்துவம் அளித்துள்ளது. இவ்வழக்கில், நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்கள் நம்பகமானவை.

அவற்றை மறு பரிசீலனை செய்ததில், சந்தேகங்களுக்கும் அப்பால் அரசு தரப்பு தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, திண்டிவனம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

வழக்கில் 21 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, தண்டனையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement