வெற்றியை ஈட்டுமா தி.மு.க.,வின் இரட்டை வேடம்?
ஏ.ரகுராமன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்; செவிலியர்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்' என முழங்கினார், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால், இன்று நடப்பதென்ன?
தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, அம்மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர். அவர்களை கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, தற்போது தேர்தலை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகையை, 'அட்வான்ஸாக' கொடுக்கிறது. கோடைக்கால சிறப்பு தொகை என்று, 2,000 ரூபாயை அள்ளி வீசுகிறது.
கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மனமில்லாமல், 'நிதி இல்லை' என்று கூறி கைவிரிக்கிறது.
மேலும், கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய செவிலியர்களின் போராட்டங்களையும், சாலைப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்களின் அடிப்படை ஊதிய உயர்வு கோரிக்கைகளையும், நிதியை காரணம் காட்டி நிராகரிக்கும் தி.மு.க., அரசுக்கு, இப்போது, திடீரென, ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், 1.31 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க எங்கிருந்து நிதி வந்தது?
போராடும் ஊழியர்களுக்கு மாதம் சில ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஊதியம் வழங்க முடியாத அரசுக்கு, தேர்தலை ஒட்டி கோடிக்கணக்கான ரூபாயை ஓட்டுக்காக அள்ளி வீச முடிகிறது என்றால், இது திட்டமிட்ட ஏமாற்று வேலை அல்லவா?
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருக்குமேயானால், போராடும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து, தேர்தல் ஆதாயத்திற்காக தற்காலிகச் சலுகைகளை வழங்குகிறது என்றால், இதை எப்படி அனைவருக்குமான அரசாக ஏற்க முடியும்?
உண்மையிலேயே அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால், இதுபோன்ற இலவச திட்டங்களிலும் எதிரொலித்திருக்க வேண்டும். மாறாக, போராட்டக்காரர்களிடம் ஒருமுகம், தேர்தலுக்காக வேறொரு முகம் என, இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க.,வின் இந்த ஏமாற்று நாடகம் ஒரு போதும் அக்கட்சிக்கு வெற்றியை தராது!
அலட்சியம் காட்டும் அதிகாரிகள்! கோபால் மாரிமுத்து, சென்னையிலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுக்கோட்டை அரசு விடுதியில் தங்கி
படிக்கும் கல்லுாரி மாணவியருக்கு, வெறும் சாதம் மட்டும் தான்
வழங்கப்படுகிறதாம். பத்திரிகைகளில் செய்தி படித்த போது, மனம் பதறிப் போனது.
வெறும் சாதம், ஊறுகாயோடு பசி ஆறுவது தனிப்பட்ட வீடுகளில்
நடக்கலாம். ஆனால், அரசு நடத்தும் விடுதிகளில் இந்த அவலம் நடக்கிறது
என்றால், காரணம் என்ன?
ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற அலட்சியம் தானே?
இதுவே, ஒரு தனியார் கல்லுாரி விடுதியில் நடந்திருந்தால், பெரிய சர்ச்சை
ஏற்பட்டு இருக்கும்; அவ்விடுதி பல சோதனைகளுக்கு ஆட்பட்டிருக்கும்.
காமராஜர் ஆட்சியில், 1961லிருந்து 1967 வரை ஆறு ஆண்டுகள் விடுதியில்
தங்கிப் படித்தேன். 150 பேருக்கான மூன்று வேளை உணவும் இலவசமாக
வழங்கப்பட்டது. சாதத்தோடு சாம்பார், ரசம், மோர் தினமும் உண்டு; ஒரு நாள்
கூட தவறியதில்லை.
சுழற்சி முறையில் மாணவர்களே சென்று, தங்களுக்கு
பிடித்த காய்கறிகளை வாங்கி வருவர். அரிசி, பருப்பு போன்ற நுகரும்
பொருட்களின் இருப்பு ஆகியவற்றை சரியாக பராமரித்து, தீர்ந்து விடும்போது,
குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்கி, 'ஸ்டாக்' செய்து விடுவர்.
நான் தங்கியிருந்த ஆறு ஆண்டுகளில் ஒரு நாள் கூட இதில் தவறு ஏற்பட்டது இல்லை; அப்படியொரு சிஸ்டம் அப்போது இருந்தது.
ஆனால் இன்றோ, கல்லுாரி மாணவியருக்கு வெறும் சோறு போட்டதை, 'இது சாதாரண
செயல்முறை தாமதமே தவிர, தீவிர விஷயமல்ல' என்று, வெகு அலட்சியமாக
கூறுகின்றனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.
' ஒரு பானை சோற்றிற்கு
ஒரு சோறு பதம்' என்பது போல், அரசு விடுதிகளில் சீரான கண்காணிப்பு, தணிக்கை
இல்லை என்பதற்கு இச்சம்பவமே சான்று!
ஆரிய - திராவிட
பம்மாத்து வேண்டாம்! எல்.விஜயராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலை, ஆரிய - திராவிடப் போர் என்று
பிரகடனம் செய்து, தன் திராவிட சேனைகளிடம்,'ஓரணியில் நின்று வெல்வோம்'
என்று கூறி, போர் முழக்கம் செய்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.
அவரது இந்த பேச்சு, அந்தக் காலத்து ராஜா - ராணி படங்களுக்கு இவரது தந்தை கருணாநிதிஎழுதிய சினிமா வசனங்கள் போல் அல்லவா உள்ளது!
அதுசரி... ஸ்டாலின் தலைமையில் உள்ள கட்சி, திராவிட சேனை என்றால், அவரை
எதிர்த்து, போர்க்களத்தில் நிற்கும் அ.தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர்,
தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் எல்லாம் ஆரிய படையா?
பா.ஜ., என்றால் ஆரியக் கட்சி, பிராமணர்கள் கட்சி என்று உருட்டும் இவர், தமிழக பா.ஜ.,வினரையும் ஆரியக்கூட்டம் என்கிறாரா?
வெறும், 2 சதவீதம் கூட இல்லாத, எவர் வம்புக்கும் போகாத பிராமணர்களை,
'ஆரியர்' என்று வசைபாடுவதுடன், தேர்தல் களத்தில் தன்னை எதிர்ப்பவர்கள்
அனைவரையும், 'ஆரியர்' என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து, ஆதாயம் தேட
நினைக்கிறார், ஸ்டாலின்.
ஏற்கனவே, இதுபோன்ற பல பம்மாத்து
நாடகங்களை முன்னாள் தி.மு.க., தலைவர்கள் அரங்கேற்றி இருப்பதால், ஸ்டாலின்
கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்!
ரயில் சினேகம் தான்
கொள்கையா? சிவகுமாரன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை மட்டும் தான் பகிர்ந்து கொடுக்க
வேண்டும். ஆட்சியில் மறந்தும் பங்கு கொடுத்துவிடக் கூடாது' என்பதில் இரு
திராவிட கட்சிகளும் உறுதியாக உள்ளன.
ஆட்சியில் பங்கு கொடுப்பதால் என்ன பாதகம் ஏற்பட்டு விடும்?
அத்தனை அதிகாரத்தையும் ஒரு குடையின் கீழ் வைத்து கோலோச்ச வேண்டும் என்பதாலா?
ஒருமித்த வாக்குறுதிகள், பரஸ்பர ஆதரவு, பாராட்டு, நிதிப்பகிர்வு எல்லாம் -தேர்தலில் ஓட்டுப்பதிவு முடியும் வரை தானா?
ரயில் சினேகம் போல, பயணம் தொடரும் வரை உரையாடலும், தின்பண்டங்களும்,
இடப்பகிர்வும் என நட்பு கொண்டாடி, பயணம் முடிந்து சேருமிடம் வந்ததும், நீ
யாரோ, நான் யாரோ என்பது தான், திராவிட கட்சிகளின் கொள்கையா?
மேலும்
-
ஏஐ எதிர்காலத்தை இந்தியா - பிரான்ஸ் இணைந்து கட்டமைக்கும்; அதிபர் மேக்ரான்
-
மொபைல் டேட்டாவில் செய்தது போல் ஏஐ தொழில்நுட்பத்திலும் புரட்சி செய்வோம்: முகேஷ் அம்பானி
-
வெட்கமின்றி அதிமுக திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தள்ளாத வயதில் தனிக்கட்சி தொடங்கினார் பண்ருட்டி
-
டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
2028 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா உள்பட 12 அணிகள் நேரடி தகுதி