பரமக்குடியில் தறி மேடையுடன் சிறிய கைத்தறி பூங்கா ரெடி நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு

பரமக்குடி: -: பரமக்குடி எமனேஸ்வரம் ஜீவா நகரில் சிறிய கைத்தறி பூங்காவில் 40 தறி மேடைகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதனால் நெசவாளர்களுக்கு தொடர் தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

பரமக்குடி உதவி கைத்தறி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் உள்ளன. இங்கிருந்து கச்சா பொருட்களை பெற்று நெசவாளர்கள் வீடுகளில் தறி மேடை அமைத்து தொழில் செய்கின்றனர். எமனேஸ்வரம் ஜீவா நகரில் ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.64 லட்சத்து 20 ஆயிரத்தில் 40 தறி மேடைகளுடன் சிறிய கைத்தறி பூங்கா கட்டப்பட்டுள்ளது.

இங்கு நுால் மற்றும் பம்பர் சேலைகள் உற்பத்தி செய்யப்படும். இதற்காக 120, 240 மற்றும் 480 ஊக்குகள் கொண்ட ஜக்கார்டு பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன தொழில் நுட்பத்தில் கணினி இயந்திரம் மூலம் வடிவமைக்கப்பட்ட பென் டிரைவர்கள் பொருத்தி அனைத்து வகையான டிசைன்களிலும் சேலை நெய்ய முடியும். இங்கு தொழில் புரிய விருப்பம் உள்ள நெசவாளர்கள் தினந்தோறும் காலை துவங்கி மாலை வரை பணி மேற்கொள்ளலாம்.

இதனால் நெசவாளர்கள் சங்கங்களை விட கூடுதலான கூலி பெற வாய்ப்பு உள்ளது. உற்பத்தி செய்யும் சேலைகள் கோ ஆப் டெக்ஸ் மற்றும் தனியாரிடம் விற்பனை செய்யப்படும். கைத்தறி பூங்கா பிப்., மாத இறுதிக்குள் திறக்கப்பட உள்ளதாக கைத்தறி துறையினர் தெரிவித்தனர்.

Advertisement